காலை செபம்
குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவு தினம் இன்று
குருக்களுக்காகச் செபம்
இயேசு ஆண்டவரே! ஆன்மாக்களின் நல்லாயனே! நிலையானப் பெருங்குருவே! உமது தெய்வீகக் குருத்துவத்தில் பங்குகொள்ள அழைக்கப்பட்டுள்ள எங்களது குருக்களுக்காக நன்றி கூறுகின்றோம். 🙏 அவர்களைக் காப்பாற்றும் படியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். அவர்கள் உமக்குச் சொந்தமானவர்களானதாலும், அவர்களுடைய வாழ்வே உமது பலிப் பீடமாக இருப்பதாலும், அவர்களின் உடலும் உள்ளமும் பலவீனமானவை என்பதாலும், அவர்களை விழ வைக்க சாத்தான் விரிக்கும் வலைகள் அதிகம் என்பதாலும் அவர்களைக் காப்பாற்றும். அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும், இந்த உலகத்தின் மத்தியில் வாழ்கிறார்கள். இவ்வுலகச் சிற்றின்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிப்பதாலும், அவர்களை உமது திரு இருதய நிழலில் வைத்துக் காப்பாற்றும். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சோதனை, வெறுமை, தனிமை, தடுமாற்றம், ஆகியவற்றிலிருந்து காத்துக் கரம் பிடித்து வழி நடத்தியருளும். அவர்களுடைய தியாகத் வாழ்வே வீண் எனத் தோன்றும் பொழுது அவர்கள் அருகிருந்து ஆறுதல் அளியும். அவர்களை நீர், உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து, உமக்கும், உம் மக்களுக்கும், அவர்கள் பணிவுடனும் பயனுடனும் தொண்டாற்றச் செய்தருளும். அவர்களின் அருட்பணிகள் எங்களுக்குப் பலன் அளிக்கும்படிக்கு அவர்களது ஒவ்வொரு சிந்தனையையும், சொல்லையும், செயலையும் ஆசிர்வதித்துப் புனிதப் படுத்தியருளும். அதனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் உண்மையானப் புனித வாழ்விற்கு நடத்திச் செல்வார்களாக. பலர் உம்மை அறிந்து, இவ்வுலக வாழ்வில் உம்மை அன்பு செய்து, விண்ணுலகத்தில் நிலையான பேரின்பத்தை அடையும் வகையில் அவர்களின் சீடத்துவம் பலன் தருமாறு அவர்களை ஆசிர்வதித்தருளும். இந்த செபத்தை அன்பு அன்னை மரியாளின் பரிந்துரையிலும், என்றென்றும் வாழும் பெருங்குருவாம் உமது மகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம்.