Site icon Life Setter Saluja

காலை செபம் 

காலை செபம் 

பனிமய மாதா ஜெபம்

சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும் சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்.🙏
(3 முறை).

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.

நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம்.

எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!.

Exit mobile version