புனித மோனிக்கா நவநாள் செபம்
தொடக்க செபம்
புனித அகுஸ்தினாரின் தாயும் எங்கெளுக்கெல்லாம் முன்மாதிரிகையான தாயாய் விளங்கும் புனித மோனிக்கம்மாளே! நீங்கள் வழிதவறிய உமது மகனை மீட்டெடுக்க அழுது புலம்பாமல் விடாமுயற்சியோடு இடைவிடாது செபித்தீரே! எல்லா தாய்மார்களும் உம்மைப்போலவே தங்களது குழந்தைகளை இறைவான்பால் கொண்டு சேர்க்க நீர் மன்றாடும். நாங்கள் கடவுளுடைய எல்லா குழந்தைகளோடும் இணைந்திருக்க அருள்தாரும். கடவுளை விட்டுப் பிரிந்து ஊதாரியாய்த் திரியும் பிள்ளைகளோடும் உடனிருந்து அவர்களை இறைவனிடம் ஈர்த்துவர எங்களுக்காக இறைவனிடம் பரிந்துபேசியருளும். அன்பான தாயும், பொறுமையுள்ள மனைவியுமான புனித மோனிக்கம்மாளே! உமது வாழ்நாளில் பல துன்ப துயரங்கள் உமது இதயத்தைத் துளைத்ததெனினும், நீர் விரக்தியடையாமல், விசுவாசம் இழக்காமல், மிகுந்த எதிர்பார்ப்போடும் விடாமுயற்சியோடும் ஆழ்ந்த நம்பிக்கையோடும், உமது கணவருக்காகவும் பாசமிக்க மகனுக்காகவும் தினமும் செபித்தீரே! உமது செபத்திற்கான பலனையும், மகனாகிய புனித அகுஸ்தீனின் மனமாற்றத்தையும் கண்டுணர்ந்தீரே.
அதே துணிவையும், பொறுமையையும், இறைவன் மீதுள்ள விசுவாசத்தையும் எனக்கு வழங்கியருளும். புனித மோனிக்கம்மாளே, என் குடும்பத்திற்கான என் விண்ணப்பங்களுக்கு இறைவன் சாதகமாக பதிலளிக்கவும், எல்லாவற்றிலும் அவரது விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்ளவும் எனக்காகப் பரிந்து பேசியருளும். இந்த மன்றாட்டுக்களை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக எனக்குப் பெற்றுத்தந்தருளும், ஆமென்.
சிறப்பு செபம்:
இன்றைய நாளிளே இறைவனுடைய திருவுளத்திற்கு அடிபணியாத குழந்தைகளுக்காக மன்றாடுவோம். அவர்கள் அனைவரும் இறைவனிடம் திரும்ப உருக்கமாக செபிப்போம். அன்பின் இறைவா புனித மோனிக்காவைப் போல நாங்கள் எங்களது குழந்தைகளுக்காக இடைவிடாது செபித்து அவர்கள் உம்மிடம் திரும்ப எங்களுக்குத் தேவையான வரம் தர உம்மை நோக்கி மன்றாடுகின்றோம் ஆமென்.
(அமைதியில் நமது குழந்தைகளுக்காக செபிப்போம்)
இறுதி செபம்
புனித மோனிகாவே ! மிகச்சிறந்த கத்தோலிக்க அன்னைக்கு உதாரணமே ! ‘நமது இறைப்பணியை நாம் நமது குடும்பத்தில் இருந்து ஆரம்பித்தல் வேண்டும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவரே ! உமது ஆழமான நம்பிக்கை மிகுந்த ஜெபங்களின் மூலம் இறைவனுக்கும், உமது குடும்ப உறவுகளுக்கும் பாலமாக இருந்து ஆன்மாக்களை மீட்ட புனிதரே ! மகனின் ஒழுங்கற்ற வாழ்வின் மூலம் வேதனையுற்ற உமது மனம் “இவ்வளவு கண்ணீர் வழிந்தோட காரணமாக இருந்த மகன் ஒரு நாள் மனம் திரும்புவார் ” என்ற ஆயரின் ஆறுதல் மிகுந்த வார்த்தைகள் உம்மை திடப்படுத்தியதே ! மகன் மனம் மாற முப்பது ஆண்டுகள் கண்ணீர் சிந்தி மன்றாடிய உமது ஆழமான விசுவாசத்திற்கு பரிசாக உமது மகன் அகுஸ்தீனாரை இறைவன் புனிதர் நிலைக்கு உயர்த்தினாரே! அசைக்க முடியாத அந்த ஆழமான விசுவாசத்தை எங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தந்தருள வேண்டி எங்களுக்காக மன்றாடும். தனது மகனுக்காக, மகளுக்காக கண்ணீர் சிந்தும் எண்ணற்ற தாய்மார்களின் வேதனையுற்ற உள்ளங்களுக்கு ஆண்டவர் ஆறுதலும், நம்பிக்கையும் அளித்திட வேண்டி அவர்களுக்காக மன்றாடும். எங்கள் பிள்ளைகள் ஞானத்தில் சிறந்து விளங்கிடவும், எந்நாளும் ஆண்டவர் வழியில் நடந்திடவும் விண்ணகத்தில் இருந்து எங்களுக்காக தொடர்ந்து மன்றாடும் அம்மா.!
புனித அகுஸ்தீனாரே -எங்களுக்காக வேண்டிகொள்ளும் புனித மோனிக்கம்மாளே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்