காலை செபம் 

காலை செபம் 

பனிமய மாதா ஜெபம்

சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும் சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்.🙏
(3 முறை).

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.

நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம்.

எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!.

காலை செபம்

காலை செபம்

குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவு தினம் இன்று

குருக்களுக்காகச் செபம்

இயேசு ஆண்டவரே! ஆன்மாக்களின் நல்லாயனே! நிலையானப் பெருங்குருவே! உமது தெய்வீகக் குருத்துவத்தில் பங்குகொள்ள அழைக்கப்பட்டுள்ள எங்களது குருக்களுக்காக நன்றி கூறுகின்றோம். 🙏 அவர்களைக் காப்பாற்றும் படியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். அவர்கள் உமக்குச் சொந்தமானவர்களானதாலும், அவர்களுடைய வாழ்வே உமது பலிப் பீடமாக இருப்பதாலும், அவர்களின் உடலும் உள்ளமும் பலவீனமானவை என்பதாலும், அவர்களை விழ வைக்க சாத்தான் விரிக்கும் வலைகள் அதிகம் என்பதாலும் அவர்களைக் காப்பாற்றும். அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும், இந்த உலகத்தின் மத்தியில் வாழ்கிறார்கள். இவ்வுலகச் சிற்றின்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிப்பதாலும், அவர்களை உமது திரு இருதய நிழலில் வைத்துக் காப்பாற்றும். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சோதனை, வெறுமை, தனிமை, தடுமாற்றம், ஆகியவற்றிலிருந்து காத்துக் கரம் பிடித்து வழி நடத்தியருளும். அவர்களுடைய தியாகத் வாழ்வே வீண் எனத் தோன்றும் பொழுது அவர்கள் அருகிருந்து ஆறுதல் அளியும். அவர்களை நீர், உமது அன்பில் என்றும் நிலைத்திருக்கச் செய்து, உமக்கும், உம் மக்களுக்கும், அவர்கள் பணிவுடனும் பயனுடனும் தொண்டாற்றச் செய்தருளும். அவர்களின் அருட்பணிகள் எங்களுக்குப் பலன் அளிக்கும்படிக்கு அவர்களது ஒவ்வொரு சிந்தனையையும், சொல்லையும், செயலையும் ஆசிர்வதித்துப் புனிதப் படுத்தியருளும். அதனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் உண்மையானப் புனித வாழ்விற்கு நடத்திச் செல்வார்களாக. பலர் உம்மை அறிந்து, இவ்வுலக வாழ்வில் உம்மை அன்பு செய்து, விண்ணுலகத்தில் நிலையான பேரின்பத்தை அடையும் வகையில் அவர்களின் சீடத்துவம் பலன் தருமாறு அவர்களை ஆசிர்வதித்தருளும். இந்த செபத்தை அன்பு அன்னை மரியாளின் பரிந்துரையிலும், என்றென்றும் வாழும் பெருங்குருவாம் உமது மகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம்.

காலை செபம் 

                                                                                  காலை செபம் 

புனித இஞ்ஞாசியார் செய்த செபம்

அன்பான ஆண்டவரே! தாராள உள்ளதோடு வாழ எனக்குக் கற்றுத்தாரும். காயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் என் வாழ்நாளில் பணி புரிவேனாக! ஊதியத்தை எதிர் நோக்காமல் நான் உழைப்பேனாக! ஒன்று மட்டும் போதும் ஓ என் இறைவா! உமது திருவுளத்தை நிறைவேற்றுவதால் வரும் இன்பமொன்றையே நான் ஆசிக்கிறேன்.

ஆமென்.

♦️ புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம்

இறைவனின் அதிமிகப் புகழை இப்பூவுலகில் பரவச் செய்வதற்கும், எண்ணிக்கையில்லாத மக்களை விண்ணுலகில் சேர்ப்பதற்கும் இறைவன் தேர்ந்தெடுத்த புனித இஞ்ஞாசியாரே!

எளியேன் எனக்குத் தகுதியில்லை என்றாலும், உம் பேரிலுள்ள நம்பிக்கையாலும் உமது செல்வாக்கு வல்லபத்தாலும் ஏவப்பட்டு உமது சரணமாய் ஓடி வந்தேன். நீர் என் பாதுகாவலராயிருந்து என்னைக் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். சோதனை வேளையில் எனக்கு ஆதரவாயிரும். இறைவன் திருமுன் பரித்துரைத்து என் குறைகளைப் போக்கியருளும். சிறப்பாக என் செயல்களையெல்லாம் அர்ச்சித்து பேறுபலனுள்ளனவாக்கி விண்ணுலகப் பரிசை உறுதிப்படுத்தும். வலிமையாகிய உத்தம இறையன்பை எனக்காகக் கேட்டுத் தந்தருளும்.

ஆமென்.