திருப்பாடல் : 47
PSALM 47
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
(திருப்பாடல் 47: 1-2. 5-8)
ஜெபம்
எல்லாம் வல்ல இறைவா! உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கின்றோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் உமக்கு நன்றி கூறுகின்றோம். கடந்த மே மாதம் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல காத்து வழிநடத்தி வந்தீர். நன்றி தந்தையே..
இன்றைய ஓய்வு நாளில் உம்மை மகிமைப்படுத்த எங்களை மீண்டும் எழுப்பியுள்ளீரே ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய ஓய்வு நாளை உம்மிடமே ஒப்படைக்கிறோம். உம் திருவுடலை உணவாக உட்கொள்ள ஆவலாய் இருக்கும் எங்களை உமது அன்பினால் வழிநடத்தும்.
நல்லாயனாகிய இயேசுவே ! நாங்கள் உம் மந்தையின் ஆடுகள். நாங்கள் ஆயனாகிய உம்மீது நம்பிக்கை கொள்ளவும், ஒளியாகிய உம்மை எல்லா சூழ்நிலையிலும் முழுமையாக நம்பிடவும், துன்ப வேளைகளிலும் சோர்ந்த நேரங்களிலும் உம்மை இறுகப் பற்றிக்கொண்டு, உமது வழியில் நாங்கள் பயணிக்கவும் எங்களுக்கு அருள்புரியும்.
பிறந்த இந்த ஜூன் மாதம் முழுவதும் உமது ஆசீர்வாதங்களை எங்கள் மீது அபரிதமாகப் பொழியச் செய்தருளும்.
இயேசு மரி சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.