MORNING PRAYER

காலை ஜெபம்
“கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்”.
(திருப்பாடல் 51: 10-15 )
அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில், நீர் படைத்த படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகின்றேன், புகழ்கின்றேன், துதிக்கின்றேன், உம்மை ஆராதிக்கின்றேன்.
“இரையாதே !” என்ற உமது சொல்லால் காற்றையும், கடலையும் அடக்கிய எம் இயேசுவே! அன்று கலிலேயக் கடலில் பயணித்த படகு புயலில் சிக்குண்டபோது, உமது இருப்பை உமது அருகாமையை தெரிந்திருந்தும், அன்று அச்சத்தின் பிடியில் ஆட்க்கொள்ளப்பட்ட சீடர்களைப் போல, நாங்களும் நீர் எங்களோடு எப்பொழுதும் இருக்கின்றீர் என்ற உண்மையை அறிந்திருந்தும், உணர்ந்திருந்தும் அலகை வருவிக்கும் அச்சத்தினால், அவ்வப்போது ஆட்க்கொள்ளப்படுகிறோம்.
“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று, அன்று அப்போஸ்தல்களை நோக்கி நீர் எழுப்பிய வினா, பதிநான்கு நாள்கள் புயலில் சிக்கிய போதும், புனித பவுலை மெலித்தா தீவில் துணிவுடன் எழ வைத்தது. தூய சவேரியாரால் மலாக்கா தீவில் புயலை அடக்க வைத்தது.
இறைவா! திருத்தூதர் பவுலின் நம்பிக்கையையும், தூய சவேரியாரின் வல்லமையையும் எங்களுக்கும் தந்தருளும்.
தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம், எங்களோடு என்றும் இருக்க அருள் புரியும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
