Site icon Life Setter Saluja

MORNING PRAYER

MOR.PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER 1

காலை ஜெபம்

“நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப் பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை”.

(திருப்பாடல் 40: 1,3 6-7. 9. 10 )

பலிகளையும், காணிக்கைகளையும் விரும்பாதவரே! எரிபலிகளிலும், பாவம் போக்கும் பலிகளிலும் நாட்டம் கொள்ளாதவரே!
இந்த காலை வேளையில் உம்மைப் போற்றி, புகழ்ந்து, ஆராதனை செய்கிறேன். உமக்கு நன்றி கூறுகிறேன்.

ஆண்டவரே! நான் உம் வழியில் நடக்க, மற்றொரு புதிய நாளை எனக்கு நல்வாய்ப்பாகக் கொடுத்த உமது இரக்கத்திற்காக நன்றி அப்பா.

இறைவா! இதுநாள்வரை நான் உமது திருவுளத்தை அறிய முயற்சிக்காமல் இருந்த தருணங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.
மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.

இறைவா! உமது திருவுளத்தை அறிய, அதை நிறைவேற்ற தூய ஆவியானவரின் துணையும், வழிநடத்துதலும் எனக்குக் கிடைக்கபெற அருள் புரிவீராக. ஏனெனில், இயேசுவே “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என நீர் கூறி இருக்கிறீர். நன்றி ஆண்டவரே.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னை ஆசீர்வதித்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

Exit mobile version