MORNING PRAYER

காலை ஜெபம் – 21/01/26
திருப்பாடல் : 144
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!
(திருப்பாடல் 144: 1-2, 9-10)
🌿 ஜெபம் 🌿
எங்கள் கற்பாறையும், கோட்டையும் ஆனவரே! எங்கள் பாதுகாப்பாளரும், மீட்பரும் ஆனவரே! எங்கள் கேடயமும், புகலிடமும் ஆனவரே! இந்த அதிகாலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கின்றோம்.
இறைவா, இந்த புதிய நாளை எங்களுக்குக் கொடையாகக் கொடுத்தமைக்கு உமக்கு நன்றி. நேற்று முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்திய உமது மேலான கிருபைக்காக நன்றி தகப்பனே! 🙏
இறைவா! அன்று உம்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் நிமித்தம் பலம் குன்றிய இளம் தாவீது, பலமிக்க பெலிஸ்தியனை அடியோடு வீழ்த்த முடிந்தது.
நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா! இன்று நம்பிக்கை குன்றிய உம் பிள்ளைகளைக் கண்ணோக்கிப் பாரும். நாங்கள் நம்பிக்கையில் என்றும் நிலைத்திருந்து எங்கள் வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றி பெற தயைகூர்ந்து அருள் புரிவீராக! 🙏
இறைவா, தேவையில் இருப்போர்க்கு நாங்கள் நன்மை செய்ய வேண்டிய நேரங்களில் பிறர் என்ன நினைப்பார்களோ என எண்ணி நன்மை செய்யாமல் பின் வாங்கிய தருணங்களுக்காக நாங்கள் மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறோம்.
இனிய இயேசுவே, அன்று பரிசேயர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கை சூம்பியவரை நலமாக்கி நன்மை செய்தீர். ஆண்டவரே, அன்பிலும், இரக்கத்திலும் நாங்கள் உம்மைப் போல இருக்க அருள்புரியும்.
இந்த நாளை நாங்கள் உமது பெயரால் துவக்குகின்றோம். தூய ஆவியின் வழிநடத்துதல் எங்களுக்கு முழுவதும் கிடைக்கப் பெற அருள்புரிவீராக.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.