MORNING PRAYER
காலை ஜெபம்
திருப்பாடல் : 68
கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.
(திருப்பாடல் 68: 1,3. 5-6ab. 19-20)
🛐 ஜெபம் 🛐
அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம். இன்றைய நாளில் உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் சற்றும் விலகாதிருக்க அருள் புரிவீராக.
‘அப்பா’, ‘தந்தையே’ என அன்போடும், பாசத்தோடும் உம்மை அழைக்கும் பேற்றினை பிள்ளைகளாகிய எங்களுக்கு அளித்தீரே. நன்றி தந்தையே. 🙏
அப்பா! நான் என் நம்பிக்கையின்மையின் நிமித்தம் எதிர்மறை எண்ணங்களால் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வில் பின்வாங்கிய தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மனமிரங்கி மன்னித்தருளும். 🙏
தந்தையே! என் நம்பிக்கையை வளரச் செய்து எனது நேர்மறை எண்ணங்களால் எனது வலுவின்மையை வலிமை மிக்கதாக மாற்றியருளும். 🙏
இயேசுவே! இன்று தீய ஆவியின் பிடியில் சிக்குண்டு வாழ்வில் துன்புறும் எண்ணற்ற மக்களுக்காக வேண்டுகிறோம். உமது பரிசுத்த திருநாமத்தினால் அந்த தீயஆவிகளை கடிந்து கொள்கிறோம். அவைகள் அம்மனிதர்களை விட்டு வெளியேறுவதாக. தூய ஆவியானவர் அம்மக்களின் மனதில் என்றென்றும் குடிகொள்ள ஆசீர்வதிப்பாராக.
இறைவா, நீர் அருளின இப்புதிய வாரத்தை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.