காலை ஜெபம்
MORNING PRAYER

“ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்”.
(திருப்பாடல் 34: 16-19. 20,22)
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருப்பவரே! நைந்த நெஞ்சத்தாரைக் காப்பாற்றுகின்றவரே!
நேர்மையாளருக்கு நேரிடும், தீங்குகளில் இருந்து விடுவிக்கின்றவரே! உம்மை வாழ்த்தி, வணங்கி, ஆராதனை செய்கிறோம். அற்புதங்கள் செய்யும் எங்கள் அன்பரே! உம்மைப் போற்றி துதித்து நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! நீர் எங்கள் வாழ்வில் செய்த, அனைத்து வியத்தகு செயல்களையும் நாங்கள் நினைவுகூர்ந்து நன்றி கூறுகின்றோம்.
தந்தையே! என் வாழ்வில், கடந்தபோன காலங்களில், நான் இறைப்பற்றில்லாது இருந்த நேரங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இனி இன்பத்திலும், துன்பத்திலும் எவ்வேளையிலும், உம் பாதங்களை என் கரங்கள் இறுகப்பற்றிக் கொள்ளும்.
இறைவா! இந்நாளில் விஷேசமாக, இறைப்பற்றிலாதவர்களுக்காக வேண்டுகிறேன். அவர்கள் அனைவரும் உம்மில் நம்பிக்கைக் கொள்ளவும், உம் வழி திரும்பவும், உம்மில் கொண்ட விசுவாசம், அனுதினமும் பெருகவும் வேண்டுகிறேன்.
இறைவா! என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினாலே என்னை பரிசுத்தப்படுத்தும். என்னை உமக்கு சொந்தமாக்கும். இன்று முழுமையாக என்னை, உமது திருநாமத்தின் பாத்திரமாக, உம்முடைய ஆவியின் ஆலயமாக என்னை பயன்படுத்தும்.
இறைவா! உம் திருமுகத்தை தேடவும், உம் திருவழியில் நடக்கவும், என் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு விலகவும் அருள்புரியும்.
இயேசு, மரி!, சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்
