MORNING PRAYER
WINGS OF PRAISES

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
(திருப்பாடல்கள் 105:1-5)
என் அன்பிற்குரிய இறைவா! உம்மை புகழ்கின்றேன், வணங்குகின்றேன், ஆராதிக்கின்றேன்.
இந்த இனிய காலை வேளையை மீண்டும் காணச்செய்து, உம்மை தாழ்ச்சியுடன் ஜெபிக்க, வரம் தந்த மேலான ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.
இந்த நாள் ஒரு புனித நாளாக மலரட்டும். இந்நாளில் எது நடந்தாலும், அது என் நன்மைக்காகத்தான் என்று ஏற்றுக்கொள்ள கூடிய நல்ல உள்ளத்தை எனக்குத் தாரும். என்ன நேர்ந்தாலும், உமக்கு நன்றி சொல்லக்கூடிய மனப்பக்குவத்தை என்னில் மலரச் செய்யும்.
என் அன்பு இயேசுவே! என் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆசீர்வதியும். உலக நாட்டங்களில் சிக்கி கொள்ளாமல், நேர்மையான உள்ளத்தோடு, பரிசுத்தமாக வாழ.. உமது ஆவியின் கனிகளால் எம்மை நிரப்பிப் பாதுகாப்பீராக.
இயேசு மரியாயே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.
