காலை ஜெபம்
திருப்பாடல் : 114
எகிப்து நாட்டை விட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித் தளம் ஆனது. செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது.
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்? மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள் போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?
(திருப்பாடல் 114: 1-6)
ஜெபம்:
எப்போதும் எங்களை அரவணைக்கும் எங்கள் அன்பு ஆண்டவரே! இந்த காலை வேளையில், துதி உண்டாவதாக. அல்லேலூயா. மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.
உலகனைத்தின் ஆண்டவரே! எங்கள் மேல் கொண்ட நம்பிக்கையின் நிமித்தம் மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்துள்ளீரே! நன்றி அப்பா ! எங்களைப் படைத்த எங்கள் தந்தையே! உம்மை வாழ்த்திப் போற்றி தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். கடந்த இரவு முழுவதும் எங்களைக் கண்ணின் மணி போல எங்கள் அருகில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொண்ட உமது மேலான கிருபைக்காக உமக்கு நன்றி. 🙏
மன்னிப்பதில் தாராளமானவரே! “மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.” என்ற உமது இறைவார்த்தையை நான் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் அதை என் வாழ்வில் செயல்படுத்தத் தவறிய தருணங்களுக்காக மனம் வருந்துகிறேன். பிறர் செய்யும் சிறு தவறுகளுக்குக் கூட சினம் கொள்ளும் நான், உமக்கு எதிராகப் பாவம் செய்தபோதெல்லாம் என்னை நீர் மனமிரங்கி மன்னித்தீர் என்பதை நான் பல நேரங்களில் மறந்து விடுகிறேன். பிறர் செய்த குற்றங்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக என்னை நானே நியமித்ததை எண்ணி வெட்கமடைகிறேன்.
இறைவா என் கடின உள்ளத்தினை மாற்றியருளும். அன்பில் விளைந்த ‘மன்னிப்பு’ என்னும் மகத்துவமான பண்பை கொண்ட ஈர உள்ளதினனாய் என்னை மாற்றியருளும். மற்றவரை மனதார மன்னிக்கும் தருணைத்தில் கிடைக்கும் மன நிம்மதி, மன நிறைவு, மன அமைதி ஆகியவற்றை நான் நாள்தோறும் சுவைக்கச் செய்தருளும்.
ஏனெனில் இயேசுவே, ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை எங்களை நீர் மன்னிக்கச் சொல்லி இருக்கிறீர்.
இயேசு, மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்
ஆமென்.