காலை ஜெபம்
திருப்பாடல் : 146
யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார்.
(திருப்பாடல் 146: 5-10)
ஜெபம்
விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவரே! பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றவரே! சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றவரே! பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரே! தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றவரே! இந்த காலை வேளையில் உம்மை வாழ்த்தி, போற்றித் துதித்து ஆராதனை செய்கிறோம்.
ஆண்டவரே! என் வாழ்வில் நான் எனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூராமல் இருந்த பல தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இரக்கத்தின் தேவனே! என்னை மனமிரங்கி மன்னித்தருளும்.
அனைவருக்கும் அன்புக் கட்டளைகளை அளித்தருளிய எங்கள் அன்பர் இயேசுவே! “உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என நீர் கூறியிருக்கின்றீர். அவ்வாறு நான் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் ஆண்டவராகிய உம்மை நான் என்றென்றும் அன்பு செய்து உமது முதன்மையான கட்டளையை நான் என்றும் செவ்வனே நிறைவேற்ற அருள் புரிவீராக.
நான் என்னையே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்யக் கூடிய தூய உள்ளத்தினை ஆண்டவரே எனக்குத் தந்தருளும். இதன் மூலம் நான் உமது இரண்டாவது கட்டளையை அனுதினமும் நிறைவேற்ற அருள் புரிவீராக.
இயேசுவே! இந்த நாளை நான் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உமது அன்பை எனக்கு அடுத்திருப்பவருக்கு பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவியாக நான் விளங்கவும் அருள் புரியும்.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.