காலை ஜெபம்
திருப்பாடல் : 106
ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை. வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர். அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்; தங்கள் செயல்கள்மூலம் வேசித்தனம் செய்தனர். எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கு எதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
(திருப்பாடல் 106: 34-37. 39-40. 43,44)
ஜெபம்
மனிதர்கள் செய்த பாவங்களை மனமிரங்கி மன்னிப்பவரே! இரக்கப் பெருக்கத்தினால் இவ்வுலகை அழிக்காமல் காத்துவருபவரே! அளவற்ற அன்பின் பொருட்டு கடலளவு பொறுமை கொண்டவரே! உம்மை வாழ்த்தி வணங்கி ஆராதிக்கிறோம். நீர் படைத்த படைப்புகளோடு சேர்ந்து உம்மைப் போற்றி துதிக்கிறோம். நன்றி கூறுகிறோம்.
இறைவா! என்னிடம் இருப்பவை எல்லாம் பிறருக்கு ஈவதற்காக, நீர் எனக்கு அருளியது என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தும், அதை மறந்து இவை அனைத்தும் நான் உழைத்துச் சேர்த்தவை என்ற என்ற ஆணவத்தோடு நான் ஏழைகளை கண்டும் காணாதது போல இருந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.
இயேசுவே, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.” என அன்று அந்த இளைஞனுக்கு கூறினீர்.
நாங்கள் விண்ணகத்தில் செல்வராக இருக்க இம்மண்ணகத்தில் நாங்கள் எங்களை முன் தயாரித்துக் கொண்டு நிறையுள்ளவராக இருக்க அருள்புரியும்.
இப்புதிய வாரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எங்களுக்குத் தூய ஆவியின் மூலம் அறிவுறுத்தும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் ஜெயத்தைத் தாரும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென். †