காலை ஜெபம்

திருப்பாடல் : 21
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர் கொண்டீர்; அவர் தலையில் பசும் பொன்முடி சூட்டினீர். அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர். உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.
(திருப்பாடல் 21: 1-6)
ஜெபம்
எல்லாம் வல்ல எம் இறைவா! உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கின்றோம். இறைவா! உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இல்லிடமும் அளித்து எங்களை உமது பிள்ளைகளாக அரவணைத்து காத்து வருகிறீர். நன்றி தந்தையே!
ஆயினும் இறைவா, முன்பு நீர் எனக்கு அளித்தவற்றில் நான் மனநிறைவு கொள்ளாது பிறருக்கு உள்ளவற்றோடு ஒப்பீடு செய்து குறை கூறும் உள்ளத்தோடு இருந்த தருணங்களுக்காக உம்மிடம் நான் மனம் வருந்துகிறேன். எனக்கு என்ன தேவை என்பதும், எப்போது தேவை என்பதையும் படைத்தவர் நீர் ஒருவரே அறிவீர் என்பதை உணராத நேரங்களுக்காக உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.
வேலைக்கு அதிகாலையில் வந்தவருக்கும், மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும் ஒரு தெனாரியம் வழங்குவது என்பது எப்படி நிலக்கிழாரின் விருப்பத்திற்கு உட்பட்டதோ அவ்வாறே ஒவ்வொருவருக்கும் நீர் அருள்பவை உமது சித்தத்திற்கு உமது விருப்பத்திற்கு உட்பட்டது என்ற உண்மையை நாங்கள் உணரும்படி செய்தருளும். பிறரோடு ஒப்பீடு செய்தல், எதிலும் குறை காணும் நிறைவற்ற உள்ளம் இவற்றை எங்களிடமிருந்து முற்றிலும் அகற்றியருளும்.
இறைவா! இந்த நாளை ஆசீர்வதியும். நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்திலும் ஜெயத்தைத் தாரும்.
இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென். †