World Environment Day
இன்று ஜூன் 05. உலக சுற்றுச் சூழல் தினம் World Environment Day. சுற்றுச் சூழல் தினம் 2025 ‘நெகிழி மாசை முடிவுக்கு கொண்டு வருவோம் – Beat Plastic Pollution’ என்கிற மையச் சிதன்னையில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியது போல நம் சொந்த வீடாகிய இப்பூமியையும் மானுடத்தையும் பேணிக் காக்க அழைப்பு பெறும் நாள். சுற்றுச் சூழல் சார்ந்த நம் பார்வைகளையும், பணிகளையும் நேர்மையாக பரிசீலனை செய்யும் நாள். சுற்றுச் சூழல் ஆன்மீகத்தை உருவாக்கி, வளர்க்க வேண்டியதை பற்றி சிந்திக்க வேண்டிய நாள். பெருகி வரும் நெகிழி மாசை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட வேண்டிய நாள்.
நிலம், நீர், காற்று, ஆகாயம் மிக அதி வேகமாக மீட்க முடியாத வகையில் மாசுப்படுத்தப்படுகிறது. ஒலி மாசு, ஒளி மாசு, நெகிழி மாசு, மின்னணு மாசு, உணவு மாசு போன்றவை வரைமுறையின்றி அதிகரித்து வருகிறது. நுண் நெகிழி துகள்கள் – Micro and Nano Plastics மனித உடலில் புகுந்து வருகின்றன. இது மனிதனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஆபாயம் அதிகரித்து வருகிறது.
பூமியில் உயிர் வாழ்வுக்கு தேவையான பல்லுயிரியம் மிகவேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. சூழலியலின் முக்கிய அம்சங்களாகிய வனங்களும், கடல்களும் திட்டமிட்டு வளர்ச்சி என்கிற போர்வையில் அழிக்கப் படுகின்றன. பூமி வெப்பமாதல் பெரும் காலநிலை நெருக்கடியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பூமியை காக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
சுற்று சூழல் பிரச்னை களால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழை நாடுகள் மற்றும் ஏழை மக்களே. மேலும் லாபம், சுரண்டல் மற்றும் வணிகமயம் ஆகியவற்றை மையப்படுத்திய அதிதீவிர முதலாளித்துவ போக்கு சுற்றுச் சூழல் சீர்க்கேடுகளுக்கு முக்கிய காரணம் என்பதை உணர வேண்டும்.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பூமியை சிதைத்து, சுரண்டி அழிப்பதால் பூமிக்கு பிரச்னை இல்லை. தொல்லியல் காலத்தில் இருந்தே பூமி சிதைவுகளை சந்தித்து மீண்டு எழுந்துள்ளது. பூமி சிதைவதால் மனிதகுலம் தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
இறைவனின் உன்னத படைப்பாகிய இந்த அழகிய பூமியையும், அதன் இயற்கை வழங்களையும், சுற்றுச் சூழலை யும், படைப்பின் மகுடம் எனப்படும் மானுடத்தையும் பேணிக் காக்க மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்காக என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்? அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய பூமியை கொடுக்க போகிறோம்?
நம் நற்செய்திப் பணியில், அருட்பணி திட்டத்தில் நம் அனைவரின் சொந்த இல்லமாகிய பூமியையும் அதன் வளங்கள் அனைத்தையும் பேணி காக்க தெளிந்த இலக்குகள் மற்றும் கொள்கைகளுடன் கூடிய திட்டம் இருக்கிறதா?
ஐக்கிய நாடுகள் அவையின் நீடித்த நிலை வளர்ச்சிக்கான 17 இலக்குகள் பற்றி நம் பணித்தளங்களில் விழிப்புணர்வு கொடுக்கிறோமா? செயல்படுத்த திட்டங்கள் வகுத்து இருக்கிறோமா? திருத்தந்தை பிரான்சிஸ் 10 ஆண்டுகளுக்கு முன் நமக்கு தந்த ” புகழ் அனைத்தும் உமக்கே ” திருமடல் நம் மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறதா? திருமடலை வாசித்து, விவாதித்து செயல் திட்டங்கள் வகுக்க முயற்சி செய்தோமா? நிலைத்த நீடித்த நிறை வளர்ச்சிக் காக சிந்திப்போம்.