PSALM 93, MORNING PRAYER, DIVINE MORNING
திருப்பாடல் : 93
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.
(திருப்பாடல் 93: 1-2)
🛐 ஜெபம் 🛐
எல்லாம் வல்ல இறைவா! அனைத்துக்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே! உம்மை ஆராதிக்கின்றேன். என்னை உருவாக்கி , கிறிஸ்தவராக்கி, உம் ஒரே மகனின் இரத்தத்தால் என்னை மீட்டதோடு, இந்த இரவு நேரத்தில் என்னைக் காப்பாற்றிய உமது கருணைக்காக என் முழுமனதோடு உமக்கு நன்றி கூறுகிறேன். இன்று பாவத்தில் விழாமல் என்னை காப்பாற்றி, எல்லா தீமைகளில் இருந்தும் மீட்டருள வேண்டும் என்று உம்மிடம் மன்றாடுகின்றேன். அன்னை மரியே, என் அன்புத் தாயே! இறைவனின் புனிதர்களே! எனக்கு இறைவனிடமிருந்து மீட்பையும், அருட்கொடைகளையும் பெற்றுத்தாருங்கள். உங்கள் மன்றாட்டின் பலனால் உங்கள் அனைவரோடும், நான் முடிவில்லாமல் கடவுளின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கும் பேறுபலன் கிடைப்பதாக.
இறைவா, திருத்தூதர்கள் காலத்தில், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்ததைப் போல திருஅவையில் ஒன்று கூடும் நாங்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருக்க அருள் புரிவீராக.
இந்த நாள் முழுவதும் என்னோடு இருந்து என்னை அசீர்வதித்து வழி நடத்தும்.