திருப்பாடல் : 30
MORNING PRAYER
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
(திருப்பாடல் 30 : 1,3. 4-5. 10-12)
👼 ஜெபம் 👼
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடிப்பவரே! வலியோரை அரியணையினின்று தூக்கி எறிபவரே!
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறவரே! பசித்தோரை நலன்களால் நிரப்புபவரே! செல்வரை வெறுங்கையராய் அனுப்புகிறவரே!
வாரும். இறங்கி வாரும்!
இந்த வையகத்தை வளப்படுத்த இறங்கி வாரும்.! வல்லவராம் கடவுளே வாரும். அரும் பெரும் செயல்கள் செய்ய இப்பூமிக்கு இறங்கி வாரும்.
இறைவா! சாராவுக்கும், ரெபேக்காவுக்கும், மனோவாகுவின் மனைவிக்கும், செக்கரியாவின் மனைவி எலிசபெத்திற்கும் நீர் மனமிரங்கி குழந்தைப் பேறு அளித்து அக்குழந்தைகளை உமது இறைத்திட்டத்திற்கு பயன்படுத்தியது போல அன்னாவின் அழுகுரலுக்கும் செவிசாய்த்து சாமுவேலை அளித்து அவரையும் உமது இறைத்திட்டத்திற்கு பயன்படுத்தினீர்.
இரக்கத்தின் இறைவா இன்று விஷேசமாக மகப்பேறின்றி தவிக்கும் எண்ணற்ற பெண்களுக்காக செபிக்கிறோம். புலம்பி அழும் அவர்களது அழு குரல்களைக் கேளும். மனமிரங்கி அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்து மக்கட்பேற்றினை அளித்தருளும். உமது இறைத்திட்டத்தை நிறைவேற்றும் கருவிகளாக அக்குழந்தைகளை மாற்றியருளும்.