திருப்பாடல் : 16
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
(திருப்பாடல் 16: 1-2. 5, 7-11)
🛐 ஜெபம் 🛐
உயிர்த்த என் இறைவனே ! என் ஆண்டவரே ! என் தேவனே! நீரே என் கடவுள்.
ஆண்டவரே உம்மை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; நீர் எப்பொழுதும் என் வலப்பக்கம் உள்ளீர். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’
உயிர்த்த இயேசுவே, அன்று உம்மை கல்லறையில் உம்மைக் காணாது திரும்பிய பெண்களிடம் “அஞ்சாதீர்கள்” என ஆறுதல் கூறி அவர்களை தைரியமூட்டினீர்.
இன்று எண்ணற்ற பெண்கள் தங்களது குடும்பகளில், பணிபுரியும் இடங்களில், பொதுவெளிகளில் பலவித காரணங்களால் அஞ்சி நடுங்கும் நிலை உள்ளது. ஆண்டவரே, அவர்களது அச்சத்தை அகற்றி அவர்களுக்கு அருகில் ஆறுதலாக இருப்பீராக.
இறைவா, இன்று தாழ்ச்சியுள்ளவர்களாகவும், சிறுபிள்ளைகள் போல கபடமற்றவர்களாகவும் எங்களைப் புதுப்பித்து, உமது திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்க அருள் புரிந்தருளும்.
உம்மை உண்மையுடன் அன்பு செய்பவர்களுக்கு, நீர் வாக்களித்திருக்கும் நிலையான வாழ்வை நாங்களும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்க அருள் புரிந்தருளும்.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.