grateful

PSALM 103, MORNING PRAYER

திருப்பாடல் : 103

MOR.PRAYER 1

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.

(திருப்பாடல் 103: 1-4. 9-12)

🛐 ஜெபம் 🛐

எங்கள் குற்றங்களை எல்லாம் மன்னிப்பவரே! எங்கள் நோய்களை எல்லாம் குணமாக்குபவரே! எங்கள் பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிபவரே! உம்மை போற்றுகின்றோம். உம்மைப் புகழ்கின்றோம். நன்றி கூறுகின்றோம். 🙏

தந்தையே! எங்களுக்கு நல்லதொரு சிறந்த ஆயனை கடந்த 12 ஆண்டுகளாக அளித்தீர். நன்றி இறைவா. திருச்சபையை திறம்பட வழி நடத்தத் தேவையான சிறந்த ஞானத்தையும், சீரிய குணநலன்களையும் அவருக்கு அளித்தீர்.

உயர்ந்த இரக்க குணத்தையும், தாழ்ச்சியையும், எளிமையையும் அவரிடமிருந்து நாங்கள் கண்டுணர்ந்து கற்றுக் கொள்ளுமாறு எங்களுக்கு எங்களின் சமகாலத்து வாழும் புனிதரை அளித்தீரே உமக்கு நன்றி.

“உன் பெயர் பேதுரு. இந்த பாறையின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்” என்று கூறிய எம் இயேசுவே! உமது திருச்சபையின் முதல் திருத்தந்தை பேதுரு முதல் 266-வது திருத்தந்தை பிரான்சிஸ் வரை உமது அருளினால் திருச்சபை அற்புதமாக வளரச் செய்தீர். நன்றி இயேசுவே.

இரக்கத்தின் இறைவா, நேற்று உம்மிடம் அழைத்துக் கொண்ட எங்கள் திருத்தந்தை பிரான்சிஸை உமது சிறகுகளில் அணைத்துக் கொள்ளும். அவருக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.