இரவு செபம்

இரவு செபம்

வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன்.

இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து நன்றி கூறுகின்றேன்.

இன்று நான் யாருடைய மனதையாவது புண்படும்படியாக நடந்து இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன். உமது அருளினால் தான், நான் இன்று பல்வேறு காரியங்களை செய்ய முடிந்தது.

இன்று எனக்கு நீர் தந்த உணவு, உடை, பாதுகாப்பு அனைத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.

இந்த இரவில், தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள் என் மனதில் தோன்றாமல், எம்மை ஆசீர்வதியும்.

எமக்கு அமைதியான தூக்கம் தந்து, அதன் மூலம் நல்ல ஓய்வை கொடுத்து, நாளை புத்துணர்வோடு எழுந்து, என் பணிகளை தொடர வரம் தாரும். ஆமென்.

இரவு செபம்

இரவு செபம்

அன்புள்ள தந்தையே,
இதோ இந்த நாளின் நிறைவில் நான் உமது திருமுன் வருகிறேன் .
இந்த இரவானது அமைதியான போர்வைபோல, உங்கள் பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொள்ள அனுமதியுங்கள்.

இன்றைய நாளில், உமது பிரசன்னத்தால் நிறைத்தமைக்காக நன்றி. என்னை போசித்தமைக்காக நன்றி. அதிகாலையிலிருந்து இந்நேரம்வரை என்கூடவே இருந்து, எனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி. எனது போக்குவரத்தில் கரம் பற்றி நடந்தமைக்காக நன்றி.

பாலைவனத்தில் உள்ள உம்முடைய மக்களைப் போலவே, நானும் என் வாழ்வில் உமக்கெதிராக கேள்விகள் பல எழுப்பியுள்ளேன், என் வாழ்க்கையின் இந்த வனாந்தர நாட்களில் நான் வாழ்ந்தபோது, கடவுளாகிய உம்மை சந்தேகித்தேன், நான் அலைந்து திரிந்தேன்.. அதற்காக என்னை மன்னியுங்கள். இன்றைய நாளில் உமக்கு வருத்தம் விளைவித்தமைக்காக என்னை மன்னியுங்கள். ஆனாலும், நீங்கள் பொறுமையுள்ள கடவுள் – என்னை விட்டு ஒருபோதும் விலகிச் செல்வதில்லை என்பதை நன்கு அறிவேன்.

ஆண்டவரே, நீர் வானங்களைத் திறந்து, மன்னாவைப் பொழிந்தீர் – கைகளால் செய்யப்படாத வானதூதர்களின் உணவை கொடையாக கொடுத்தீர் என்று இன்றைய திருப்பாடலில் செபித்தோம் .

அப்பா! நீங்கள் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறீர். நான் அதைப் பார்க்காதபோதும், என்னால் அதை உணர முடியாதபோதும் கூட, நீங்கள் என்னோடு இருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

நீர் உமது மக்களை, அவர்கள் வயிறு நிரம்பும் வரை மன்னாவால் உணவளித்து, காடைகளால் நிறைத்தது போல,
என் மனதின் தரிசு நிலங்களை நிரப்புகிறவரே! என் பற்றாக்குறையை நீக்குபரே! நான் மறக்கப்பட்டதாக உணரும் தருணத்தில், “இதோ நான் இங்கே இருக்கிறேன்” என்று திடப்படுத்தும் ஆவியானவரே! அனைத்து தீய சக்திகளிடமிருந்து என்னையும், என் ஆன்மாவையும்
காத்துக்கொள்ளுங்கள்.

இன்றிரவு, நான் என் வெறுமையை உணராமலும், என் ஏக்கங்கள் என் தூக்கத்தை குழப்பாமலும், என் சுமைகள் என்னை அழுத்தமாலும், என் மனப் போராட்ட்ங்கள், வலிகள், தனிமைகள், நோய்கள் எவையும் என்னை எதுவும் செய்யாதபடிக்கு, எனக்கு துணையாக உமது காவல் தூதர்களை அனுப்பி வையுங்கள்.

என் அமைதியற்ற இருதயத்தை, சமாதானத்தால் நிறைத்துக் கொள்ளுகள். நான் இப்போது பயத்தினால் அல்ல, ஏனென்றால் பாலைவனத்தில் உணவளித்தவர்; இன்றிரவு என் அருகில் இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு துயில் கொள்வேன். அதனால் உம்மில், எனக்கு எதிலும் குறைவு ஏற்படாது.

புனித மரியே! சூசையப்பரே! எங்கள் உடலின் வலிமையை புதுப்பிக்க, நாங்கள் எடுக்கப்போகும் இந்த ஓய்வை ஆசீர்வதியுங்கள்.

இயேசுவே, புனித மரியே! சூசையப்பரே! என் இதயத்தையும், ஆன்மாவையும் உங்களிடம் தருகிறேன்.

ஆமென்.

இரவு செபம்

இரவு செபம்

இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

(திருப்பாடல்கள்134:1)

இந்த நாள் முழுவதும் எங்களை வழிநடத்தி வந்த, உமது மேலான இரக்கத்திற்காக கோடான கோடி நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி மீட்பரே! எங்களைப் பாவம் ஒருநாளும் மேற்கொள்ளாதவாறு, எங்களை காத்திடுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.

இதோ இந்த இரவு நேரத்தில், உம்முடன் பேச வந்திருக்கும் எங்களை ஆசீர்வதித்தருளும். ஆண்டவரே! மாலையில் மலையில் நீர் தனிமையில் சென்று, கடவுளோடு பேசிக் கொண்டிருந்தீர், அதுபோல ஆண்டவரே, உம்மோடு பேச நாங்கள் வந்திருக்கிறோம்.

அப்பா இந்த இரவு வேளையில், எத்தனையோ குடும்பங்கள் உண்பதற்கு உணவில்லாமல், பட்டினியோடு தூங்கும் நிலையில் இருப்பதை நாங்கள் காண்கிறோம், குறிப்பாக அகதிகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், கவனிக்க யாருமில்லாத மனிதர்கள் ஆகியவர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம்.

அப்பா நீரே அவர்களுக்கு துணையாய் இரும். அவர்களுக்கும் நீரே கடவுள், அவர்களும் உம் பிள்ளைகள் தானே! அவர்களோடு இருந்துருளும். சாத்தானின் சோதனையில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

அன்பு இயேசுவே! எங்கள் மீட்பரே! இரவில் தூங்குவதற்கு கூட வழியில்லாமல் இருக்கும், ஒவ்வொரு மனிதர்களையும் நினைவு கூர்ந்து ஜெபிக்கிறோம் அப்பா. ஆசீர்வதித்தருளும், பாதுகாத்தருளும், அரவணைத்தருளும், வழிநடத்தும்.

தீய கனவுகள் காணாமலும், அமைதியான தூக்கம் கிடைக்கவும், காலையில் எழுந்து உம்மை மகிமைப்படுத்த எமக்கு வரமருளும். ஆமென்.

இரவு செபம் 

இரவு செபம் 

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. ஜெபிப்போமாக..

அன்பும், பாசமும் நிறைந்த தெய்வமே இறைவா! உம்மை நன்றியோடு போற்றுகிறோம் அப்பா. உழன்ற எலும்புகளுக்கு உயிர் கொடுப்பவர் நீரே. மீண்டும் எமக்கு வாழ்வு கொடுக்கின்றாய். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை புகழ்கின்றோம். உமது வல்லமையும் பாதுகாப்பும், இரக்கமும், அருளும் எங்கள் வாழ்வையும், குடும்பங்களையும் ஆசீர்வதிக்க, ஆளுகை செய்ய உருவாக்க, உருமாற்ற உடனிருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன்மீது அன்பு செலுத்த.. அப்பா எங்கள் மீது நாங்கள் அன்பு கூறுவதுபோல, எங்களுக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறவும் கற்றுக் கொடுத்தீரே.. எங்கள் வாழ்வை உருவாக்கினீரே.. இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் வளர்க்க, தெய்வமாய் எங்களுக்கு துணையாய் இருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்!

இந்த நாள் முழுவதும் உம்முடைய அருள் கொடைகளால், எங்கள் வாழ்வை நிரப்பினீரே.. ஆசீர்வாதத்தின் பிரசன்னத்தில் எங்களை உருவாக்கினீரே.. உமக்கு நன்றி செலுத்துகிறோம் அப்பா!

இந்த இரவுப் பொழுதை ஆசீர்வதிப்பீராக. தாகம் உற்றவர்க்கு நீராய் வருகிறீர்.. பசியுற்றோரை உணவால் நிரப்புகிறீர்.. உம்முடைய பேரன்பை முன்னிட்டு, உம்முடைய நன்மை தனங்ளுக்காக.. உமது பிள்ளைகளாக நாங்கள் மாற.. எங்களை ஆசீர்வதியும்.

இந்த இரவிலே எங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் நீரே
பொறுப்பெடுப்பீராக. இந்த இரவு முழுவதும் உமது அன்பும் ஆசிர்வாதமும், எங்களோடும் குடும்பத்தோடும் இருப்பதாக. எங்கள் உள்ளங்களை, இல்லங்களை நிரப்புவதாக. இரவு முழுவதும் நிம்மதியான உறக்கமும், ஆசீர்வாதமான கனவுகளும், நாங்கள் அதிகமாய் பெற்றுக்கொள்ள அருள்புரியும். காவல் தூதர்கள் எங்களோடும், எங்கள் குடும்பத்தோடும் இருப்பார்களாக.

எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன் தூய ஆவியார், உங்கள் அனைவரையும் இந்த இரவு முழுவதும் பாதுகாப்பாராக. ஆமென்.! ஆமென்.!!

இரவு செபம்..

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

இரவு செபம்

இரவு செபம்

அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,

இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள், எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும், வல்லமையுள்ளதாகவும் எங்களுக்கு உமது ஆசீராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஆண்டவரே, நாங்கள் எப்போதும் உம்முடைய குரலுக்கு செவி கொடுக்கிறவர்களாகவும், உம்முடைய இறை வார்த்தைகள், எங்கள் வாழ்வில் ஆசீர்வாதமாகவும் இருக்க உமது அன்பை எங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம்.

இன்றைய எங்கள் அன்றாட பணிகளை, எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நாள் முழுவதும், எம் வாழ்க்கை பயணத்தில் சிறப்பாக பயணிக்க, நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இன்று இரவு எமக்கு மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தந்தருளும். அதிகாலை எழுந்து, உம்முடைய பாதத்தில் அமர்ந்து, செபித்து, நாளைய எங்கள் பணிகளை இனிதே துவங்க, உமது மேலான இரக்கத்தின் ஆசீரை எமக்கு அளித்தருளும்.

எங்கள் தாழ்மையின் நன்றிகளையும், வேண்டுதல்களையும் ஏற்று, உமது அன்பின் ஊற்றால், இறை இரக்கத்தினால் எம்மை நிரப்பி ஆசீர்வதியும்.

இரவு செபம்

இரவு செபம்

(திபா 84: 2. 3. 4-5a,7a. 10)

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!

வானகத் தந்தையே இறைவா!
இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது.

உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம்.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும்,
நீரே இன்னும் என் ஒளி.
நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும்.

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும்.

நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் – ஆமென்

(திபா 84: 2. 3. 4-5a,7a. 10)

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!

வானகத் தந்தையே இறைவா!
இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது.

உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் சோர்வடைந்த பறவையைப் போல, என் ஆன்மா இந்த இரவுப் பொழுதில் உமது உடனிருப்புக்காக ஏங்குகிறது. நீரே என் உண்மையான அடைக்கலம், என் அமைதி, என் ஆறுதல், என் பாதுகாப்பான மறைவிடம்.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆதலால் அவர்களின் இதயங்களை நீர் மகிழ்ச்சியினால் நிரப்புகிறீர். உலகம் இருண்டு போனாலும்,
நீரே இன்னும் என் ஒளி.
நான் பலவீனமாக உணர்ந்தாலும், நீரே என் பலம். ஆண்டவரே, இன்றைய நாளில் எனது பலவீனத்தால் உமக்கெதிராகவும், சக மானிடருக்கெதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக என்னை மன்னியும்.

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; எனவே, இன்றிரவு உமது கருணையால் என்னைச் சூழ்ந்து கொள்ளுங்கள். என் தலையணை உமது உறுதி தரும் வார்த்தைகளாகவும் , என் போர்வை, உமது தூதர்களின் இறக்கைகளின் நிழலாகவும் இருக்கட்டும்.

நான் நாளை, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் எழுந்திருப்பேன் என்னும் நம்பிக்கையில், இந்த இரவினை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன்

இரவு செபம்..

இரவு செபம்..

அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம்.

பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.

தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும். பிறருடைய கடைமைகளிலே, நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.

எங்கள் பெற்றோரிடமும், சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும், பிள்ளைகளிடமும் மனம் புண்படும்படியாக எதாவது செய்திருந்தால், எங்களை மன்னியும்.

தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும். நாளை காலை மீண்டும் எழுந்து, உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.