PSALM 68 PRAYER
திருப்பாடல் : 68
கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும். எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. கடவுள் போற்றி! போற்றி!
(திருப்பாடல் 68: 28-29, 32-35c)
🛐 ஜெபம் 🛐
நம்பிக்கையைத் தருகின்ற நல்அமுதே! என் வாழ்வை நம்பிக்கையில் துலங்க செய்பவரே! உம்மை தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
“பெற்றுக் கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை” என்று கூறிய எம் இயேசுவே, பிறருக்கு அதிக அளவில் உதவி செய்ய தகுந்த சூழ்நிலையை எங்களுக்குத் தந்தருளும். அன்னை மரியின் அரவணைப்பில், தூதர்களின் பாதுகாப்பில் கண்விழித்து நாங்கள் மீண்டும் வாழவும், உம்மைப் போற்றிப் புகழவும், எங்களின் ஆன்மாவின் மீட்புக்காகவும் மீண்டும் ஒரு புதிய நாளைத் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
இறைவா! உம் திருமுகத்தைத் தேடவும், உம் திருவழியில் நடக்கவும், எங்கள் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு நாங்கள் விலகவும் அருள்புரியும்.
இயேசு, மரி!, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.