PSALM 68
திருப்பாடல் : 68
கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.
(திருப்பாடல் 68:1-6ab)
ஜெபம்
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் எம் இறைவா, இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றோம். துதிக்கின்றோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம்.
“உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்.” என்று கூறிய எம் இயேசுவே, தூய ஆவியின் மூலம் அனுதின வாழ்க்கையில் எங்களுக்கு அலகையை எதிர்த்து நிற்கும் துணிவினையும், ஆற்றலையும் தந்தருளும்.
இப்புதிய வாரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைத் திறன்பட குறித்த நேரத்தில் செய்து முடித்திட நல்ல ஞானத்தையும், திறனையும் தந்தருளும்.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.