PSALM 33
திருப்பாடல் : 33
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
(திருப்பாடல் 33: 12-13. 18-21)
🛐 ஜெபம் 🛐
என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் தந்தையே! உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதித்து வணங்குகிறோம். ஒரு தாய் தன் சேயை அன்போடு நோக்குவது போல், இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் எங்கள் அருகில் இருந்து எங்களை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி! மற்றொரு புதிய மாதத்தை எங்களுக்கு வாய்ப்பாகக் கொடுக்க இருக்கிறீர். உமக்கு நன்றி.
இறைவா, உம் பிள்ளைகளாகிய எங்களை நம்பி ஒவ்வொருவருக்கும் நீர் ஒவ்வொருவிதமான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கின்றீர். நன்றி இறைவா. 🙏 அதற்கெல்லாம் நாங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, கொடுத்த பொறுப்பில் உண்மையுள்ளவர்களாக நாங்கள் இருக்க அருள் புரிவீராக.
நீர் எங்களுக்கு அருளும் ஒவ்வொரு நாளும், ஆயத்தமாயிருக்கிற, பொறுப்புள்ள பணியாளனாக நாங்கள் மாற நீர் எங்களுக்கு அளிக்கும் நல்வாய்ப்பு என்ற உண்மையை ஒவ்வொரு நாளும் நாங்கள் உணரும்படி செய்தருளும்.
இறைவா, நீர் எனக்கு தந்த தாலந்துகளை உமது மாட்சிக்காகவே நான் பயன்படுத்துவேன். உமக்கு ஏற்ற பிள்ளையாக இந்நாளில் நான் நிச்சயம் நடப்பேன்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமேன்.
விண்ணகத்தில் இருக்கிற…(1)
அருள் நிறைந்த…(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்…(1)
ஆமேன்.🙏