PSALM 27
திருப்பாடல் : 27
MORNING PRAYER
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
(திருப்பாடல் 27: 1. 4. 13-14)
🛐 ஜெபம் 🛐
ஆண்டவரே நீரே என் ஒளி; நீரே என் மீட்பு; யாருக்கும் நான் அஞ்ச வேண்டியதில்லை. ஆண்டவரே நீரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
மனிதரோ, நோயோ, நொடியோ, துன்பமோ, துயரமோ, அதிகாரமோ, அடக்குமுறையோ, சதியோ, வீண்பழியோ, கடனோ, கவலையோ இவற்றில் எவை எனக்கு இடறலாக இருந்தாலும் படைத்த இறைவன் நீர் இருக்க எதற்கு நான் அஞ்சிட வேண்டும்?
அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன்.
இறைவா, எங்களுக்கு கல்வி ஞானம் அளித்த ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்காகவும் இன்று விஷேசமாக செபிக்கிறேன். தற்போது கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் பணி அழுத்தம் இல்லாமல் நல்ல முறையில் கற்பிக்கக்கூடிய ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும். கற்கும் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்க அருள் புரிவீராக.
ஆண்டவரே! நாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த புனிதர் அன்னை தெரசாவை எங்கள் நாட்டிற்காக அளித்த இறைவா உமக்கு நன்றி. கருணை இல்லங்களின் பாதுகாவலரான புனித அன்னை தெரசாவின் விழாவினை இன்று கொண்டாடும் நாங்கள் கருணை இல்லங்களில் சேவை புரியும் எண்ணற்ற அருட்பணியாளர்களுக்காக பிராத்திக்கிறோம். அவர்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினை அளித்திடும்.
இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னைக் கரம் பிடித்து வழி நடத்தும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.