திருப்பாடல் : 24
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.
(திருப்பாடல் 24: 1-6)
🌿 ஜெபம் 🌿
என்றும் வாழும் எங்கள் தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மைப் போற்றுகிறேன். நன்றி கூறுகிறேன். நேற்றைய நாள் முழுவதும் என்னைக் காத்து வழிநடத்திய உம் கிருபைக்காக நன்றி.
தந்தையே உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
இறைவா, எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும். இதனால் இயேசுவே ! நீர் விதைத்த இறையாட்சி இப்பூவுலகெங்கும் செழித்து வளர்தோங்குக.
உமது இறையாட்சியில் நாங்கள் பங்கு கொள்ளும் பேற்றினை கொடுக்கவிருப்பதற்காக நன்றி.
இறைவா கடந்த இந்த 12 மாதங்களில் எங்களது இக்கட்டான காலக்கட்டங்களில் எல்லாம் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்தினீரே. நன்றி தகப்பனே.
இந்த ஆண்டு நாங்கள் அலகையின் தூண்டுதல்களினால் செய்த அனைத்து பாவங்களையும் மனமிரங்கி மன்னிப்பீராக.
இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். நாங்கள் துவங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.