திருப்பாடல் : 149 MORNING PRAYER
]
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது.
(திருப்பாடல் 149: 1-6a,9b)
🛐 ஜெபம் 🛐
தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைபடுத்தும் என்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! எல்லாவிதமான புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் உரியவர் நீர்! இந்த காலை வேளையில் தந்தையே உம்மை வாழ்த்தி போற்றுகிறோம்.
இறைவா, புதிய வாரத்தில் துவக்கத்திலிருக்கும் எங்களுக்கு இந்த வாரத்தில் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் அறிவுறுத்தும். இந்த வாரம் முழுவதும் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் எங்களுக்குக் கிடைக்கப் பெற அருள் புரிவீராக.
“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.”* என இறைவா எங்களை அழைத்தீர்.
இயேசுவே, நீர் ஒருவர் மட்டுமே உலகின் ஒளி என்பதை மக்கள் உணர்ந்தவர்களாய் உம் பாதையில் எந்நாளும் நடந்திட அருள்புரிவீராக.
குருட்டு வழிகாட்டிகளை நம்பி, ஒளியென நினைத்து அவர்கள் பின்னே இருளை நோக்கிப் பயணம் செய்யும் எண்ணற்ற நபர்களின் அகக் கண்களைத் திறந்தருளும். அவர்கள் செய்து கொண்டிருக்கும் தவறினை அவர்களுக்கு உணர்த்தியருளும். அலகையின் கைகளில் இருந்து அந்த ஆன்மாக்களைப் பாதுகாத்தருளும்.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.