PRAYING WITH THE PSALM, PSALM 2
திருப்பாடல் : 2
வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்;
‘அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ என்கின்றார்கள். விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார். அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;
‘என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்’.
(திருப்பாடல் 2: 1-9)
🛐 ஜெபம் 🛐
என் அன்புக்குரிய இயேசு கிறிஸ்துவே, இந்த காலை வேளையில் என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை அளித்த எங்கள் ஆண்டவரே, நான் பிறரிடத்தில் எந்த பலனையும் எதிர்பார்க்காது தூய அன்பை செலுத்த எனக்கு அருள் புரியும்.
ஆண்டவரே உம்மைப் பற்றிய அறிவில் வளர நிக்கதேமைப் போல உம்மிடம் ஆர்வமாய் அணுகிவருகிறேன். ஆன்மீக அறிவில் வளர்ச்சி பெற தேவையான ஞானத்தைத் தூய ஆவியானவர் மூலம் தந்தருளும்.
இறைவா, நாங்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, தூய ஆவியால் புதுப்பிறப்படைய அருள் புரிவீராக. ஏனெனில் தூய ஆவியால் புதுப்பிறப்பு அடைபவரே இறையாட்சிக்கு உட்பட முடியும் என கூறி இருக்கிறீர்.
தந்தையே! அன்று கூடியிருந்த இடம் அதிரும் அளவிற்கு நீர் திருத்தூதர்களை தூய ஆவியால் ஆட்கொள்ளச் செய்து கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூற வைத்தீர். அதே தூய ஆவியின் மூலம் இன்று அருட்பணியாளர்களுக்கு இறை வார்த்தையை அறிவிக்க துணிவினையும் நாவன்மையையும் தந்தருளும்.
இறைவா இந்த புதிய வாரத்தை உமது பெயரால் நாங்கள் துவக்குகின்றோம். ஆசீர்வதித்து வழி நடத்துவீராக.