VELANKANNI MATHA

NOVENA TO OUR LADY OF VELANKANNI—NATIVITY OF MOTHER MARY

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்:

VELANKANNI MATHA

 

NOVENA TO OUR LADY OF VELANKANNI

NATIVITY OF MOTHER MARY

இறை மக்களால் போற்றப்படும் அமல ஆரோக்கிய அன்னையே! உமது நிகரற்றப் புகழினை எடுத்துரைக்க எவரால் இயலும்? மனுவான இறைவன் உம் வழியாகவன்றோ இவ்வுலகிற்கு மீட்பளித்தார். நீர் என்றும் கன்னிமைக்குப் பழுதின்றி கடவுளின் தாயாக விளங்குகிறீர். உம்மை வாழ்த்துகிறோம். ஓ, விண்ணகத்தில் வீற்றிருக்கும் எங்கள் இன்பமே! இறை ஒளியை அள்ளி வழங்கிடும் குளிர் நிலவே! உண்மை வழி காட்டும் விண்மீனே! உம் கரங்களில் தவழும் அன்புக் குழந்தையை ஆராதித்து உம்மை வணங்குகிறோம். இயேசுவே எங்களின் அரசர். நீரே எங்கள் அரசியாக இருக்கிறீர். அவர் எங்களின் ஆண்டவர். நீர் எங்களின் அன்னை. விண்ணகத் தந்தைக்கும் மனிதருக்கும் இடையே நடுவராக இருக்கிறார் கிறிஸ்து. உமது திருமகனுக்கும் எங்களுக்கும் இடையே நீர் நடுவராக இருக்கிறீர். இயேசு விண்ணக வழியாக இருக்கிறார். நீர் அதன் வாயிலாக இருக்கிறீர். ஓ, பேறுபெற்ற இஸ்ரயேல் குலமகளே! அருளின் இருப்பிடமே! படைத்த இறைவனை எங்களின் மீட்பராக ஈன்றெடுத்தீர். உலகமே கொள்ள முடியாத அவரை நீர் உமது திரு வயிற்றில் தாங்கினீர். உயிர்களுக்கு உணவூட்டுகின்றவரை நீர் பாலூட்டி வளர்த்தீர். இதனாலன்றோ எல்லாத் தலைமுறையினரும் உம்மைப் பேறுடையாள் என்று வாழ்த்துகின்றன! உம் திரு மகனிடம் எமக்காகப் பரிந்து பேசும். அவரை அன்பு செய்து சேவித்து

வாழ வரமருளும். அவரோடும், உம்மோடும் விண்ணகத்தில் முடிவில்லா இன்பமடைய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *