இரவு செபம்
இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
(திருப்பாடல்கள்134:1)
இந்த நாள் முழுவதும் எங்களை வழிநடத்தி வந்த, உமது மேலான இரக்கத்திற்காக கோடான கோடி நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி மீட்பரே! எங்களைப் பாவம் ஒருநாளும் மேற்கொள்ளாதவாறு, எங்களை காத்திடுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.
இதோ இந்த இரவு நேரத்தில், உம்முடன் பேச வந்திருக்கும் எங்களை ஆசீர்வதித்தருளும். ஆண்டவரே! மாலையில் மலையில் நீர் தனிமையில் சென்று, கடவுளோடு பேசிக் கொண்டிருந்தீர், அதுபோல ஆண்டவரே, உம்மோடு பேச நாங்கள் வந்திருக்கிறோம்.
அப்பா இந்த இரவு வேளையில், எத்தனையோ குடும்பங்கள் உண்பதற்கு உணவில்லாமல், பட்டினியோடு தூங்கும் நிலையில் இருப்பதை நாங்கள் காண்கிறோம், குறிப்பாக அகதிகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், கவனிக்க யாருமில்லாத மனிதர்கள் ஆகியவர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம்.
அப்பா நீரே அவர்களுக்கு துணையாய் இரும். அவர்களுக்கும் நீரே கடவுள், அவர்களும் உம் பிள்ளைகள் தானே! அவர்களோடு இருந்துருளும். சாத்தானின் சோதனையில் இருந்து அவர்களை காப்பாற்றும்.
அன்பு இயேசுவே! எங்கள் மீட்பரே! இரவில் தூங்குவதற்கு கூட வழியில்லாமல் இருக்கும், ஒவ்வொரு மனிதர்களையும் நினைவு கூர்ந்து ஜெபிக்கிறோம் அப்பா. ஆசீர்வதித்தருளும், பாதுகாத்தருளும், அரவணைத்தருளும், வழிநடத்தும்.
தீய கனவுகள் காணாமலும், அமைதியான தூக்கம் கிடைக்கவும், காலையில் எழுந்து உம்மை மகிமைப்படுத்த எமக்கு வரமருளும். ஆமென்.