MORNING PRAYER, PSALM 33

MORNING PRAYER

திருப்பாடல் : 33

ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

(திருப்பாடல் 33: 12-13. 18-19. 20,22)

🛐 ஜெபம் 🛐

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் கண்ணோக்குபவரே!
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றவரே! அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றவரே! உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதனை செய்கிறோம்.

தந்தையே! பிறரை குற்றவாளிகளாக சித்தரித்த, புறம் பேசிய, தீர்ப்பிட்ட தருணங்களுக்காக உம்மிடம் நான் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். ஏனெனில் தீர்ப்பிடுவது உமக்கு மட்டுமே உரியது என்பதை நான் அறிந்திருந்தும் அதை உணரத் தவறிய தருணங்கள் என் வாழ்க்கையில் ஏராளம். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி மன்னித்தருளும். 🙏

“நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.” என்ற உமது இறைவார்த்தையை நாங்கள் எல்லாத் தருணங்களிலும் நினைவில் கொண்டு அதன்படி நடக்க அருள் புரிவீராக.🙏

ஆண்டவரே! மேலும் ஒரு புதிய நாளை, புதிய வாரத்தை எங்களுக்கு அளித்துள்ளீர். இந்த வாரம் முழுவதும் எங்களைத் தூய ஆவியின் துணை கொண்டு வழி நடத்தி உமது திருச்சட்டத்தில் இருந்து சற்றும் நாங்கள் விலகாதிருக்க அருள் புரிவீராக.🙏

அன்னை மரியே, எங்கள் அன்புத் தாயே உமது மாசற்ற இதயம் பாவிகளாகிய எங்களுக்கு அடைக்கலமாகவும், கடவுளிடம் எங்களை அழைத்துச் செல்லும் வழியாகவும் இருக்க உம்மை வேண்டுகிறோம். 🙏

இயேசு மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *