திருப்பாடல் : 33
MORNING PRAYER
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
(திருப்பாடல் 33: 2-3. 11-12. 20-21)
🛐 ஜெபம் 🛐
எல்லாம் வல்ல எம் ஆண்டவரே! சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றவரே! வலிமை இழந்தோர்க்கு ஊக்கம் அளிப்பவரே! உம்மை வாழ்த்தி, போற்றி, ஆராதித்து வணங்குகின்றோம். ஒரு தாய் தன் சேயை அன்போடு நோக்குவது போல், இந்த இரவு முழுவதும் எங்கள் அருகில் இருந்து எங்களை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி! மற்றொரு புதிய நாளை எங்களுக்கு வாய்ப்பாகக் கொடுத்து இருக்கிறீர். உமக்கு நன்றி அப்பா! 🙏
இறைவா, உதவி தேவைப்படுவோரை நான் அறிந்திருந்தும் அறியாதது போல இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்.
பிறரன்பு சேவையில் அன்னை மரியாளை நான் பின்பற்ற அருள் புரிவீராக. எனக்கு தேவைகள் பல இருப்பினும், நான் வாழ்வியல் துன்பங்களில் இருந்தாலும் பிறருக்கு உதவிகள் புரிவதில் அன்னை மரியாளைப் போல ஆவலோடும் முழு அர்ப்பணிப்போடும் செயல்பட அருள் புரிவீராக.
இறைவா ! இன்று விஷேசமாக தேவையில் இருப்போருக்காக வேண்டுகிறேன். அவர்களுக்கு குறித்த நேரத்தில் உதவிகள் கிடைத்திட பிராத்திக்கிறேன்.
இறைவா இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னைக் காத்து வழி நடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.