MORNING PRAYER
PSALM 139
திருப்பாடல் : 139
ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.
(திருப்பாடல் 139: 1-3. 13-15.)
🛐 ஜெபம் 🛐
அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன்.
இறைவா, நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை நான் பல நேரங்களில் உணராமல், விசுவசிக்காமல் தேவையற்ற உலகக் கவலைகளில் மூழ்கி இருந்து இருக்கிறேன். உமது குரலுக்கு செவிமடுக்காமல் பற்பல பணிகளில் பரபரப்பாகி உம்மைப் புறக்கணித்த தருணங்களுக்காக மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இயேசுவே உம்முடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட தங்களது பணிகளில் ஆர்வமாய் இருக்கும் எண்ணற்ற மக்களுக்காக இன்று விஷேசமாக செபிக்கிறேன்.
ஆண்டவரே! அன்று நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மரியாவைப் போல நாங்களும் விளங்க அருள் புரிவீராக.
தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம் எங்களோடு என்றும் இருக்க அருள் புரியும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.