MORNING PRAYER
காலை ஜெபம்
திருப்பாடல் : 144
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி!போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே!போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே.! என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே. இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே.
(திருப்பாடல் 119 : 1-2, 9-10)
🛐 ஜெபம் 🛐
அகில உலகையும், அண்ட சராசரங்களையும் படைத்த எல்லாம் வல்ல எம் இறைவா! இந்த அதிகாலை வேளையில் உம்மை போற்றுகிறேன். புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன்.
இறைவா, அலகையின் சூழ்ச்சிகளிலும், அதன் தந்திரங்களிலும் சிக்கித் துன்புறுவோருக்காக இன்று விஷேசமாக செபிக்கிறேன்.
ஆண்டவரே! உலகில் நடக்கும் எல்லாத் தீமைகளுக்கும், பாவ காரியங்களுக்கும் காரணமான அலகையை எதிர்த்து நிற்க எங்களுக்கு நிறைந்த வல்லமையைத் தந்தருளும்.
நீதியை மார்புக் கவசமாகவும், உண்மையை இடைக் கச்சையாகவும், நம்பிக்கையை கேடயமாகவும், மீட்பை தலை சீராகவும், உமது இறைவார்த்தையை தூய ஆவி அருளும் போர் வாளாகவும் கொண்ட படைக்கலன்களை நாங்கள் அணிந்து கொண்டு அலகைக்கு எதிரான போரில் நாங்கள் துணிவுடனும், வல்லமையுடனும் போராட எங்களுக்குத் துணை புரிவீராக.
எங்கள் கற்பாறையும், கோட்டையுமான ஆண்டவரே நீரே எங்களுக்குத் துணை. எங்களுக்கு பாதுகாப்பாளரும், மீட்பருமான நீரே எங்கள் அரண்.
இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.