MORNING PRAYER
காலை ஜெபம்
ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்.
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.
(திருப்பாடல்கள் 85:7-13)
எங்களை படைத்து, காத்து, பராமரித்து வரும் விண்ணக இறைவா! இதோ இந்த காலை நேரத்தில், உம்மை போற்றி புகழ்கின்றோம் அப்பா.
ஆண்டவரே! இன்று இன்னொரு புதிய நாளை எனக்கு கொடுத்ததற்காக, உமக்கு நன்றி கூறுகின்றேன். இந்த புதிய நாளில், நான் சந்திக்கும் ஒரு சிலரிடமாவது உமது அன்பை எடுத்துக்கூற, எனக்கு துணிவையும் அருளையும் தாரும் அப்பா.
விண்ணக தந்தையே! உம்மை பின்பற்றி பயணம் செய்யும் உமது பிள்ளைகள் ஒவ்வொருவரும், தனது இலக்கை அடைவதற்கு நீர்தாமே உதவி செய்யும். திருச்சபையில் உள்ள அருட் பணியாளர்கள், இறைபணிக்காக எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற துணைபுரியும்.
உமது ஆசீரோடு தொடங்கும் இந்த நாள், எனக்கு வெற்றியை தரும் நாளாக அமையட்டும். பகைமை உணர்வுடன் யாரிடமும் உறவாடாமல், கனிந்த உள்ளத்துடன் நடந்துகொள்ள அருள் தாரும்.
போலி இல்லாத அன்பை விதைக்கவும், துவண்ட உள்ளத்திற்கு திடன் அளிக்கவும் எனக்கு அருள் தாரும் அப்பா. இவ்வாறு உமது இறையரசை, இப்புவியில் நான் வெளிபடுத்த எனக்கு துணை புரியும்.
இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.