MORNING PRAYER
காலை ஜெபம்
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
(திருப்பாடல்கள் 16:8-11)
✝️ஜெபிப்போமாக:🛐
எம்மோடு கூடவே இருக்கும் என் இனிய இயேசுவே! முடிவில்லா அன்பை என்னுள் வைத்து என்னை தொடர்ந்து அன்பு செய்பவரே! உம்மை வாழ்த்தி போற்றி ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
உம் பாதத்தில் அமரும் போதெல்லாம், என் வலுவின்மையை நீக்கி இனம்புரியாத ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருபவரே! உமது பிரசன்னம் தான் எனக்கு ஆறுதல். உமது அரவணைப்பு தான் எனக்கு தேறுதல். உமது பார்வை தான் எனக்கு பரவசம். உமது இறைவசனம் தான் எனக்கு ஆனந்தம்.
இப்புதிய நாளில் எம்மை நினைவு கூர்ந்து இருமடங்கு ஆசீரும், மகிமையும் அளித்து, எல்லாவித நெருக்கடியினின்று எம்மை விடுவித்து, உமது அன்பை விட்டு பிரியாதிருக்க உம் ஆசீரை தந்தருளும் .
இயேசு மரியாயே சூசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.