MORNING PRAYER
காலை ஜெபம்
கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்.
ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.
என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
(திருப்பாடல்கள் 43:1-5)
அணுக முடியாத ஒளியில் வாழும் இறைவா! இந்த காலை வேலையிலே உம்மை போற்றுகிறோம், புகழுகிறோம், வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், ஆராதிக்கின்றோம், மகிமைப்படுத்துகின்றோம்.
இந்த நேரம் வரை எங்களை வழிநடத்தி வந்த, உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
தூய்மையின் பிறப்பிடமே இறைவா! நாங்கள் பாவத்திலிருந்து மீட்பு பெற்று, தூய்மையான நிலையில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காகவே நீர் பாடுகள் பட்டீர். ஆனால் நாங்கள், எங்களின் இயலாமையினால் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகின்றோம்.
ஆண்டவரே! எங்கள் உடல் ஒருநாளும் பாவத்திற்கு இடம் கொடாதவாறும், எங்கள் உடல் ஒருநாளும் பாவத்திற்கு துணை போகாதவாரும், நீர் உமது தூதரை அனுப்பி எங்களை காத்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
இவ்வாறு நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும், சாத்தானுக்கு இடம் கொடாமலும், அவனது தீய வலையில் விழாமலும் காப்பாற்றப் படுவோமாக! இதுவிதமே நாங்கள் உமது பிள்ளைகளாக, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக வாழும் வரம்தர வேண்டும் என்று..
இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.