MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

திருப்பாடல் : 103

MOR.PRAYER 1

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.

(திருப்பாடல் 103: 1-4, 8-11)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்தவரே! இரக்கமும் அருளும் கொண்டவரே !
பேரன்பையும், இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றவரே! உம்மை இந்த காலை வேளையில் வாழ்த்தி, வணங்கி, போற்றி ஆராதனை செய்கிறோம்.

என்றென்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! இந்த புதிய நாளை எங்களைக் காணச் செய்த உமது கிருபைக்காக நன்றி. நேற்றைய ஒய்வு நாளில் உமது இறைவார்த்தையைக் கேட்டு, உமது மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலை உண்ணும் பெரும் பாக்கியத்தை எங்களுக்கு அளித்தீரே. நன்றி இறைவா!

இனிய இயேசுவே! அனுதினமும் உம் வழி நடக்க, உம்மைக் காண, உம்மைப் பின்பற்ற நாங்கள் ஆவல் கொண்டுள்ளோம். “என்னைப் பின்பற்றி வா..” என்ற உமது குரலைக் கேளாது, உமது அழைப்பை உணராது இருந்த எங்களது கடந்த கால தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிபைக் கேட்கிறோம். மன்னிக்கும் தேவனே மனமிரங்கி எங்களை மன்னித்தருளும். 🙏

ஆண்டவரே! நாங்கள் விசுவாசத்தில் என்றென்றும் நிலைத்திருந்து எந்த சூழ்நிலைகளிலும் உம் அழைப்பை ஏற்று நாங்கள் உம்மைப் பின்பற்ற எங்களுக்கு அருள் புரிவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *