ALL SOULS DAY
அனைத்து ஆன்மாக்கள் விழா
இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.
இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11’4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, “விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்”( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார். அவ்வகையில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் சிறப்பிக்கப்படும் அனைத்து புனிதர்கள் மற்றும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா பற்றியக் கருத்துக்களை இன்றைய நமது நிகழ்வில் நாம் காணலாம். இவ்விழா பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை பால் ராஜ் அவர்கள் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தை சார்ந்தவர் 1991ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். கடந்த 34 ஆண்டுகளாக உயர் மறைமாவட்டத்தில் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தந்தை அவர்கள், பல பெரிய பங்குகளிலும் திருத்தலங்களிலும் தனது பணியினைத் திறம்படச் செய்துள்ளார். தற்போது திருக்கோவிலூர் மறைவட்டத்தின் முதன்மை குருவாகவும், உயர்மறைமாவட்டத்தின் மிகப்பெரிய பங்கான இரையூர் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை அனைத்து புனிதர்கள் மற்று அனைத்து ஆன்மாக்கள் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.