ALL SAINTS DAY
புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து வந்துதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் அவர்கள்தான் புனிதர்கள், தூயவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். புனிதர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு ” உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்” ” (எபி 13:7) என்ற விவிலிய வார்த்தை நமக்கு பதில் அளிக்கின்றது.
புண்ணிய வாழ்வு அல்லது சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் 155- 156 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கமிர்னா நகரின் ஆயராக இருந்த போலிக்கார்ப்பின் எலும்புகளை எடுத்து, அதனை பத்திரமாக வைத்து இறைமக்கள் அவருடைய விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சிப்ரியான் என்பவரும் புனிதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி இருந்த வழக்கம் திருத்தந்தை ஆறாம் போனிபேஸ் காலத்தில் பந்தயோன் ஆலயம் அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றப்பட்டபிறகு அனைத்துப் புனிதர்களின் விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகின்றது.