NIGHT PRAYER
இரவு செபம்
அடுத்தவர் அறியாமல் அயலானுக்கு உதவிடும்போது, ஆண்டவராகிய நீர் கைமாறு அளிக்கின்றீர் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்த இயேசுவே! இன்றைய நாள் முழுவதும் உமது அருளுதவியில் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, உமது அன்பு பிள்ளைகளைப்போல் அரவணைத்து காத்து, வழிநடத்தியதற்காக நாங்கள் உம்மைப் போற்றி புகழ்கின்றோம்.
நாங்கள் இயங்குவதும், இருப்பதும் உம்மாலே; உமது அருட்கரம் எங்களோடு இருந்து, அறவழிகாட்டி, வாழ்வு என்னும் பாதையில் அழைத்துச் சென்று, அற்புதங்கள் செய்து வாழ வைத்ததற்காக நன்றி கூறுகின்றோம். அடுத்தவர் தரும் அங்கீகாரம் அல்ல; ஆண்டவராகிய நீர் தரும் அருள் ஆசீர் அபரிமிதமானது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு செயலையும் உமது மகிமைக்காக செய்ய, நீர் தந்த அருளுக்காக நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! சிறிய அளவு செய்தாலும், உள்ளத்திலிருந்து கொடுக்கும்போது, உள்ளத்தை உற்றும் நோக்கும் நீர், உரிய கைமாறு செய்வீர் என்பதை உணர்ந்து, எங்களால் முடிந்ததை பிறருடைய வாழ்வுக்காக வழங்கிட, எங்களைத் தூண்டியதற்காக நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! இந்த இரவு வேளையில் உறங்கச் செல்லும் நாங்கள், உமது அருட்கரங்களை நோக்கி எங்களுடைய புறக்கரங்களை நீட்டுகின்றோம். உமது காயப்பட்ட கரங்கள், எங்களுடைய உள்மனக் காயங்களை ஆற்றி, தேற்றி இளைப்பாறுதல் தந்து, இனிய உணர்வுகளோடு, உறவுகளோடு புதிய நாளை வாழ்ந்திட வழிகாட்ட வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.