MORNING PRAYER
காலை ஜெபம்
“மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்”.
(திருப்பாடல் 119 :1,2. 10,11. 17,18 )
இஸ்ரயேல் இனத்தை எகிப்திலிருந்து வழிநடத்திய எம் இறைவா! நாங்கள் எங்களைத் திருத்தி, திருந்தி வாழ திருச்சட்டத்தை எங்களுக்கு அளித்தமைக்கு உமக்கு நன்றி அப்பா.
இறைவா! அன்று நோவாவும், லோத்துவும் உம்மீது தம் கண்களைப் பதிய வைத்து, உமது கட்டளைகளைக் கடைப்பிடித்தார்கள். அதனால் அவர்கள் உம்மால் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்ததன் மூலம், இவ்வுலகின்மீது பற்று கொண்டவராய் வாழ்ந்ததால் உப்புத் தூணானார். எப்போது உமது அன்புக் கட்டளைகளை கடைப்பிடிக்கவில்லையோ, அப்போது மனிதருக்கு அழிவு ஆரம்பமாகிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ஏனெனில் திரும்பிப் பார்ப்பவர் எவரும், இறையாட்சிக்கு உட்படத் தகுதியற்றவர் ஆவார்.
எனவே இறைவா, உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் என்றும் விலகாதிருக்க அருள் புரிவீராக. போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையே நீரும், உம் திருமகன் இயேசு கிறிஸ்துவும் நிலைத்து இருக்கிறீர்கள்.
மீட்பின் தேவனே! இன்றைய தினம் மருத்துவப்பணி செய்து மரித்த மருத்துவர்கள், செவிலியர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுகிறோம்.
இறைவா! உமது பெயரால் இந்த நாளைத் துவக்குகிறோம். உமது அன்புக் கட்டளைப்படி நாங்கள் நடக்க, எங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.