DO GOOD OUT OF THE WAY

DO GOOD OUT OF THE WAY

அன்புடன் நன்மை செய்வதற்கு விதிவிலக்குகள் கூட விதி ஆகலாம்!
ஓய்வுநாளில் இயேசு நலம்தரும் இன்னொரு நிகழ்வை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் நடந்தேறுகிறது. அவருடைய வீட்டுக்கு விருந்துக்கு வருகின்ற இயேசு, நீர்க்கோவை நோய் பீடித்திருந்த ஒருவருக்கு நலம் தருகின்றார்.
வெளியிலிருந்து நமக்கு வரும் விதிகள் அல்லது விதிமுறைகளை விட நமக்கு நாமே பல சட்டங்களையும் விதிமுறைகளையும் விதித்து, ‘இப்படி! அப்படி!’ என்று வரையறைகளை இட்டுக்கொள்கின்றோம். வரையறைகளை மீறாமல் இருப்பது நலம் என்றும், வரையறைகளை மீறுதல் தவறு என்றும் பாடம் கற்பிக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு சூழலும் புதிய பதிலிறுப்பை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. “அன்பிலும் போரிலும் விதிகள் இல்லை” என்பார்கள்.
தான் கொண்ட அன்பினால் விதிவிலக்கையும் விதி என மாற்றி, விதியைக் கடந்து குனமளிக்கிறார் இயேசு.
நீர்க்கோவை என்னும் நோய் ஆங்கிலத்தில் ‘ட்ராப்ஸி’ என்று அழைக்கப்படுகின்றது. ‘ஹைட்ராப்ஸி’ (‘ஹைட்ரோ’ என்றால் தண்ணீர்) என்ற வார்த்தையே சுருங்கி ‘ட்ராப்ஸி’ என்றழைக்கப்படுகின்றது. ‘நீர்க்கோவை’ என்னும் இந்த நோய் இன்று ‘எடேமா’ என்று அழைக்கப்படுகின்றது. நம் உடலில் தண்ணீர் இரண்டு இடங்களில் சேகரிக்கப்படுகின்றது: ஒன்று, குருதிக் குழல்கள் அல்லது இரத்தக் குழாய்கள்ளூ இரண்டு, திசுக்களுக்கு இடையே உள்ள பகுதி. இந்த இரு இடங்களிலும் தேவைக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நிற்கும்போது, அந்த இடத்தில் விரலால் அமுக்கினால் அந்த இடத்தில் குழி விழும். இந்த நோய் வரக்காரணம் இதயக்குழாய்களில் ஏற்படும் நெரிசல்.
இந்த இடத்தில் இயேசுவின் இயல்பான, எதார்த்தமான பழகுதல் நமக்கு வியப்பளிக்கிறது. அதாவது, எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே அந்த இடத்தின் தலைவராக அவர் மாறிவிடுகின்றார். இது வெகு சிலருக்கு உள்ள பண்பு. சிலர் எந்த வீட்டுக்குப் போனாலும் உடனடியாக அங்கிருக்கும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்வார்கள். இயேசு இந்தப் பண்பைப் பெற்றுள்ளார்.
தன் முன்னே ஒருவர் நலமற்று அமர்ந்திருக்க, தான் உண்டு குடித்து மகிழ்வதா? என்ற நிலையில் இயேசு அவருக்கு உடனே நலம் தர விழைகின்றார். ஓய்வுநாள் அவருக்குத் தடையாக இருக்கிறது. தான் தன் மனதில் அதைத் தடையாகக் கருதவில்லை என்றாலும், அங்கிருக்கும் பரிசேயர்களின் பொருட்டு அவர்களிடம் வினாத் தொடுக்கின்றார்: ‘ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?’ கேள்விக்கு விடை அளிக்காமல் அனைவரும் மௌனம் காக்க, இயேசு நலமற்றவரின் கரத்தைப் பிடித்து அவருக்கு நலம் தருகின்றார்.
ஓய்வுநாளில் விதிவிலக்கு என்று இருந்த ஒன்றை இயேசு விதி என மாற்றுகின்றார். நலமற்றவருக்கு நலம் தருகிறது என்றால், தேவையில் இருப்பவருக்கு உதவி செய்தல் என்றால், அன்பு காட்டுவதில் விதிவிலக்குகள் கூட விதி ஆகலாம் என்பது இயேசு நமக்குத்‌ தரும் செய்தியாக இருக்கின்றது. ஆமென்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *