MORNING PRAYER
காலை ஜெபம்
திருப்பாடல் : 19
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
(திருப்பாடல் 19: 1-4)
🛐 ஜெபம் 🛐
அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கின்றோம். நன்றி செலுத்துகின்றோம். 🙏
இன்றைய நாளில் உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் விலகாதிருக்க அருள் புரியும்.
இயேசுவே! உமது பன்னிரு சீடர்களை தேர்ந்தெடுக்கும் முன் இரவெல்லாம் இறை வேண்டலில் நீர் கழித்தீரே! எங்கள் வாழ்வில் இனி நாங்கள் செய்யும் முக்கிய செயல்களுக்கு முன் இறைவேண்டல் செய்து, உமது திருவுளத்தை அறியக் கூடிய ஞானத்தை எங்களுக்குக் கொடையாக கொடுத்தருளும். இது நாள்வரை இறைவேண்டல் செய்யாது துவக்கிய பல காரியங்களுக்காக நாங்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். அக்காரியங்களில் பெரும்பாலும் உமது விருப்பமின்றி எங்களது சுய விருப்பமே மேலோங்கி இருந்ததால் அவைகளில் குழப்பங்களும், தடைகளும், அவமானங்களும் மிகுந்திருந்தன.
எங்கள் இனிய இயேசுவே !, இனி வரும் காலங்களில் எங்களது வாழ்வில் நிகழும் அனைத்தும் உமது விருப்பமே. எங்களது விருப்பமன்று.
இறைவா, இந்த புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். தூய ஆவியின் துணை கொண்டு எங்களைக் காத்து வழி நடத்தியருளும். எங்கள் இறுதி மூச்சு வரை உம் பிள்ளைகளாக, உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க வரம் தாரும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.