காலை ஜெபம்
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.
உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.
என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்; என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.
என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.
பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.
(திருப்பாடல்கள் 69:16-20)
கருணையே உருவான இறைவா! இதோ இந்த காலைப்பொழுதில், உம்மோடு பேச உறவாட வந்திருக்கும் என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
அளவிட முடியாத அன்பால், என்னை தேற்றுகின்ற இறைவா! உமது பாதம் என் சிம்மாசனம், உமது காலடி என் வாழ்வின் சன்னதி, உமது வார்த்தை என் உயிர்மூச்சு.
கருணையின் உருவமாகிய இறைவா! உமது கருணை மிகவும் பெரியது, எங்களால் அளவிட முடியாதது, இந்த பாவியின் மேல் உமது இரக்கத்தை பொழிந்தருளும், உமது கருணையின் கடலில் என்னை மூழ்கச் செய்யும்.
உமது அன்பிலிருந்து விலகி சென்ற நேரம், என் வாழ்வின் இருளின் நேரம்; உமது பார்வையிலிருந்து விலகிச்சென்ற நேரம், என் வாழ்வின் துன்ப நேரம். ஆண்டவரே! என்னை நினைவில் வையும், என்னை கருணையுடன் பார்த்தருளும்.
அப்பா! இவ்வுலகில் உமது பிள்ளைகள் சந்திக்கும் இன்னல்களை நீர் அறிவீர். எங்களை காக்கிறவர் நீர் ஒருவரே! நீர் இல்லாமல் ஒரு நொடி கூட என்னால் வாழ முடியாது அப்பா. எங்கள் மேல் மனமிரங்கும்.
அன்பு நேசரே! அன்பின் வடிவமே! என் கடவுளே! என்னோடு இரும், தினந்தோறும் என் வாழ்க்கை பயணத்தில், நான் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளிலும், என்னை வழிநடத்தும். காத்தருளும். நன்றி ஆண்டவரே!
இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.ஆமென்.