காலை ஜெபம்
திருப்பாடல் : 128
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
(திருப்பாடல் 128: 1-5)
ஜெபம்
எங்களோடு என்றும் இருக்கும் எங்கள் விண்ணக தந்தையே! முடிவில்லா அன்பை எங்கள் மேல் வைத்து, எங்களைத் தொடர்ந்து அன்பு செய்பவரே! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
இறைமகனே! எங்கள் இனிய இயேசுவே! உம் பாதத்தில் நாங்கள் அமரும் போதெல்லாம், எங்கள் வலுவின்மையை நீக்கி, இனம்புரியாத ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருபவரே! உமது பிரசன்னம் தான் எங்களுக்கு ஆறுதல். உமது அரவணைப்பு தான் எங்களுக்கு தேறுதல். உமது பார்வை தான் எங்களுக்கு பரவசம். உமது இறைவசனம் தான் எங்களுக்கு ஆனந்தம்.
அன்பு இயேசுவே! “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.” என்று கூறினீரே! நாங்கள் அவர்களைப் போல அல்லாமல் உமது கிருபையை எங்கள் செயல்களில் நாங்கள் வெளிப்படுத்த அருள் புரியும்.
இறைவா, நாங்கள் எளியோருக்கு இன்னும் அதிக அளவில் உதவிடவும், அவர்களுக்கு ஆதரவாய் என்றும் இருந்திடவும் எங்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகளைத் தொடர்ந்து தந்தருளும். ஏனெனில் “ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்.” என நீர் கூறி இருக்கின்றீர்.
அப்பா, எங்களது வாழ் நாளெல்லாம் எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் உண்மையான தாழ்ச்சியுடன் இருக்க அருள் புரிவீராக! ஏனெனில் “தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” என நீர் கூறி இருக்கின்றீர்.
இப்புதிய நாளில் எங்களை நினைவு கூர்ந்து இருமடங்கு ஆசீரும், மகிமையும் அளித்து, எல்லாவித நெருக்கடியினின்று எங்களை விடுவித்து, உமது அன்பை விட்டு நாங்கள் என்றும் பிரியாதிருக்க அருள்புரியும்.
இயேசு மரி, சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென். †