காலை ஜெபம்
ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.
என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்; என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்.
ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்!
கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது; அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை.
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.
(திருப்பாடல்கள் 86:11-15)
விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவனுக்கு எல்லா புகழும், மாட்சியும் என்றென்றும் எப்பொழுதும் – ஆமென்!
இரக்கம் நிறைந்த விண்ணக தந்தையே! இதோ இந்த காலை வேளையிலே, உம்மை போற்றுகின்றோம்! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது அன்பிற்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! நீர் என் மீது காட்டிய அன்பு பெரிது! ஆனால், தீயவன் உமது அன்புறவில் இருந்து எங்களை பிரிக்கின்றான், இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். இறைவா! செருக்குற்றோர் எங்களுக்கு எதிராக எழுந்தாலும், கொடியோர் கூட்டம் என் உயிரை பறிக்க பார்த்தாலும், ஆண்டவரே! என் முழு இதயத்தோடு உம்மை புகழ, உம்மை அன்பு செய்ய எனக்கு ஆற்றல் தாரும். அப்பா! பிறர் எங்களுக்கு தீமை செய்தாலுமே, மன்னிக்கும் நல்ல மனதை எங்களுக்கு தந்தருளும்.
ஆண்டவரே! எங்களை துன்புறுத்திய அனைவருக்காகவும் இந்த நேரத்தில் வேண்டுகிறோம், அவர்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம் அப்பா! அவர்கள் தங்களது தீய வழிகளை விட்டு விட்டு, உண்மையின் பாதையில் வழிநடக்க அவர்களுக்கு துணை செய்வீராக!
இவ்வாறு உலகெங்கும் உள்ள உமது பிள்ளைகள், ஒற்றுமையுடன் வாழ்ந்து உமக்கு சாட்சியான பிள்ளைகளாக எப்போதுமே வாழும் வரத்தை வேண்டி, இப்போது ஜெபம் செய்கிறோம். ஆண்டவரே! எங்கள் மீது இரங்கும், இரக்கம் வையும், நாங்கள் பலவீனமான மனிதர்கள், எங்களது குறைகளை மன்னியும்.
இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.