காலை ஜெபம்
திருப்பாடல் : 63
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.
(திருப்பாடல் 63: 1-5,7-8)
🛐 ஜெபம் 🛐
அகில உலகையும் படைத்த அன்பின் ஆண்டவரே! இந்த காலை வேளையில் உம்மையே என் சிந்தை நாடுகின்றது. உம் திருமுகத்தைக் காண என் மனம் ஏங்கித் தவிக்கின்றது. படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.
உயிர்த்த எம் இறைவா! தூய ஆவியை எங்களுக்குள் அனுப்பி எங்களுக்கு துணிவையும், ஞானத்தையும் தந்தருளும். அலகையின் அனைத்து சூழ்ச்சிக்களில் இருந்தும் எங்களை தப்புவியும். அன்று கல்லறைத் தோட்டத்தில் மகதலா மரியா உம்மைக் கண்டு கொண்டது போல நாங்கள் இன்று சந்திக்கும் நபர்களில் உம்மைக் கண்டு கொள்ள அருள்புரியும். உலக காரியங்களில் நாங்கள் பற்று கொள்ளாமல் இறை வார்த்தைக்கே முக்கியத்துவம் அளிக்க அருள் செய்யும்.
இரக்கத்தின் இறைவா!
‘நம்பிக்கையின் திருத்தூதர்’ என அழைக்கப்படும் புனித மகதலா மரியாவை நினைவுகூறும் இந்நாளில், பாவ சேற்றில் மூழ்கி அதில் சிக்கித் தவித்து அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் எண்ணற்ற மக்களுக்காக விஷேசமாக வேண்டுகிறோம். அவர்கள் அனைவரும் பாவங்களைக் களைந்து மனம் மாறி அன்பின் பிள்ளைகளாக உமது பாதையில் நடக்க மன்றாடுகிறோம்.