MORNING PRAYER
காலை ஜெபம்
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக; பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!
கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக.
(திருப்பாடல்கள் 72:1-5)
விண்ணக தந்தையே இறைவா! இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.
இந்நேரம் வரை எங்களை காத்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம்.
எங்கள் அன்பான தந்தையே! இதோ உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொரு ஆன்மாவும், இறுதி நாளில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நீர் ஆவல் கொண்டீரே! அதற்காக உமது மகனையே பலியாக்கினீரே!
இதோ பாவம் செய்து, உம்மை விட்டு பிரிந்த, அனைத்து ஆன்மாக்களுக்காகவும், உம்மிடம் மனதார மன்னிப்பு வேண்டி ஜெபம் செய்கிறோம் அப்பா!
சாத்தானின் மாய வலையில், உமது ஆன்மாக்கள் விழுந்து கொண்டிருப்பதை காண்கிறோம்; எங்களை மீட்டுக் கொள்ளும் ஆண்டவரே! நாங்கள் பலவீனமான மனிதர்கள், ஏமாற்றப்படுகிறோம்! எங்களை காத்தருளும்; எங்களுக்கு அருள் புரியும்; எங்களுக்கு துணையாய் இரும்; உமது தூதர்களை அனுப்பி எங்களை காப்பாற்றும்.
ஆண்டவரே! உலகெங்கும் உள்ள, உமது பிள்ளைகளாகிய நாங்கள், சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறோம்; சோதனையில் விழுந்து விடுகிறோம்; சோதனையில் சிக்கிக் கொள்கிறோம்; எங்களால் மீண்டு வர இயலவில்லை. நீரே எங்களுக்கு துணை செய்யுமாறு, உம்மிடம் பணிந்து வேண்டுகிறோம் அப்பா! எங்களை கைவிட்டு விடாதேயும். சாத்தானிடம் கையளித்து விடாதேயும். உம்மிடமிருந்து நாங்கள் விலகி விடாமல், எங்களை பாதுகாத்துக் கொள்ளும்; அரவணைத்துக் கொள்ளும்; வழிநடத்தியருளும் அப்பா!
இவ்வாறு நாங்கள் உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தையும், பாக்கியத்தையும் எமக்கு அளித்தருளுமாறு உம்மிடம் பணிந்து மன்றாடுகிறோம்.