NIGHT PRAYER
இரவு ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே! ஒளிமிக்க உம்முடைய ஆசீர்வாதங்களை, எங்கள் மீது பிரகாசிக்கச் செய்தருளும்! மகா அற்புதமான கடவுளே, அனைத்தையும் படைத்தவரே, உமது வல்லமைமிக்க கரங்களின் நிழலில் எங்களைப் பாதுகாத்தருளும். நீரே உலகை ஆளும் நீதியின் தேவன்! நீரே அமைதியின் இளவரசர்! நீரே கருணையின் சிகரமான கடவுள்! தந்தையே, எங்களுடைய அன்றாடப் பிரச்சனைகள், கவலைகள், கஷ்டங்கள் அனைத்தையும் நீர் அறிந்துள்ளீர். எனவே, எங்களுடைய இந்த கனமான கவலைகள் அனைத்தையும், நாங்கள் உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். எங்கள் வாழ்வின் சூழ்நிலைகளை, நாங்கள் உமது காலடியில் அர்ப்பணிக்கின்றோம், உமது அன்பு, எங்கள் வாழ்க்கையில் எதையும் மாற்றும் வல்லமை பெற்றது என்பதற்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் இந்த புதிய நாளின் அமைதியையும், புதுப்பிக்கப்பட்ட பலத்தையும், எங்கள் நம்பிக்கையையும், உம்மிடத்தில் ஒப்படைக்கின்றோம்!
அன்புள்ள ஆண்டவரே! நாங்கள் உறங்குவதற்காக படுக்கும்போது, எங்கள் உடலின் பதற்றத்தைத் தணித்தருளும்; எங்கள் மனதின் அமைதியின்மையை அமைதிப்படுத்தும்; கவலையடையச் செய்யும் எண்ணங்களைத் தவிர்க்கச் செய்யும். நாங்கள் நன்கு ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். நாங்கள் உறங்கும்போது உமது ஆவியானவர் எங்கள் மனதுடனும், இருதயத்துடனும் பேசட்டும். ஆகவே, நாங்கள் காலையில் எழுந்திருக்கும்போது, இரவு நேரத்தில் நாங்கள் பெற்ற, எங்கள் வழிகளுக்கு வெளிச்சம்; எங்கள் பணிகளுக்கு வலிமை; எங்கள் கவலைகளுக்கு அமைதி; மற்றும், எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு, ஆகியவற்றினை உணர்வோமாக. இன்றிரவு எங்களுக்கு நல்ல அமைதியான உறக்கத்தை ஆசீர்வதியும். அதுவே நாளை, நாங்கள் வாழ்வதற்கான எங்கள் சக்தியும், வலிமையாக மாறுவதாக! ஆமென்! †
எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய மகா பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †